தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றபிறகு கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு மாநிலம் முழுவதும் கட்சி உறுப்பினர்கள் மாற்றம் அதிகளவில் நடைபெற்று வருகின்றது. தமிழகம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகத்தைக் கலைத்த அண்ணாமலை, சமீபத்தில் கட்சி அமைப்பு ரீதியாக உள்ள 59 மாவட்டங்களுக்கும் புதிய தலைவர்களை நியமித்தார். தற்போது மாநில நிர்வாகிகள் நியமனத்தில் அவரின் ஆதரவாளர்கள் அதிகளவில் நியமிக்கப்பட்டிருப்பது கட்சி சீனியர்களுக்கு அதிருப்தியை உருவாக்கியுள்ளதாம்.
இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது என்று சில சீனியர் நிர்வாகிகளிடம் பேசினோம். “அண்ணாமலை மாவட்ட தலைவர்களில் பட்டியலை ஒப்புதலுக்காகக் கட்சி மேலிடத்துக்கு அனுப்பியிருந்தார். மொத்தமுள்ள 59 இடங்களில் 50-க்கும் அதிகமானோர் அண்ணாமலையின் ஆதரவாளர்களாகத் தான் இருந்தார்கள். இந்த தகவலை, கட்சியின் மற்ற சீனியர்கள் உறுப்பினர்கள் டெல்லி தலைமையிடம் கூறினார்கள். இதனையடுத்து, மற்றொரு பட்டியல் தயாரிக்க வலியுறுத்தப்பட்டது. அந்த பட்டியலிலும் 29 பேர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் தான். டெல்லி தலைமையிடம் பேசிய அண்ணாமலை, `கட்சியில் சீனியர் பலரும் சரியாக ஒத்துழைப்பது கிடையாது. நான் கட்சியின் வளர்ச்சிக்காக ஏதாவது ஒரு செயலை முன்னெடுத்தாலும் அதனை சீனியர்கள் பலரும் சீரியசாக எடுத்துக்கொள்வது கிடையாது’ என்று பல காரணத்தைச் சொல்லி அந்த பட்டியலை ஓகே செய்ய வைத்தார்.
டெல்லியில் முகாமிட்டிருந்த மற்ற உறுப்பினர்கள், அண்ணாமலை கட்சியின் சீனியர்களை மதிப்பது கிடையாது. எங்களுடன் கலந்தாலோசனை செய்யாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என்று பெரிய குற்றப்பத்திரிகையை வாசித்திருக்கின்றார்கள். இந்த நிலையில் தான், சமீபத்தில் அமித் ஷா புதுச்சேரிக்கு வந்திருந்தார். அப்போது, அமித் ஷா அண்ணாமலையை நேரில் அழைத்துப் பேசி இருக்கிறார். `கட்சியில் அனைத்து உறுப்பினர்களுடன் சேர்ந்து வேலைபார்க்க வேண்டும். சீனியர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கவேண்டும். கட்சியின் பூத் கமிட்டியை வளர்க்கச் சொன்னால், உட்கட்சி பூசலை வளர்கிறீர்களா? அரசியல் ரீதியாகத் தான் நாம் வளரவேண்டும். அராஜக அரசியல் செய்ய நாம் மற்ற கட்சி கிடையாது’ என்று மிகவும் அழுத்தமாகவும் பேசியிருந்தார்.
மாநில நிர்வாகிகள் பட்டியல் – 2022
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள், மாநில அணிகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்…
பணி சிறக்க வாழ்த்துக்கள்..
– மாநில தலைவர் திரு.@annamalai_k pic.twitter.com/Qkp5JH2Eyc
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) May 6, 2022
மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியான நிலையில், சமீபத்தில் அண்ணாமலை இலங்கை சென்றிருந்தார். இதனால், மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது வெளியாகியுள்ள மாநில நிர்வாகிகள் பட்டியல் கட்சி சீனியர்கள் பலரையும் அதிருப்தியில் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது. கலை, கலாசார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்த காயத்ரி ரகுராம் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றார். அவருக்குப் பதிலாக, எல்.முருகனின் ஆதரவாளரான பெப்சி சிவக்குமார் நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஏற்கனவே நீக்கப்பட்டிருந்த பெப்சி சிவக்குமார் மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டிருப்பது காயத்திரி ரகுராம் தரப்பினரிடம் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, மாநில துணைத் தலைவராக இருந்த எம்.என்.ராஜா, தேசிய பொதுக்குழு உறுப்பினராக மாற்றப்பட்டிருப்பது, அவரின் ஆதரவாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
செய்தி தொடர்பாளராக இருந்த ஏ.என்.எஸ். பிரசாத் நீக்கப்பட்டு, அந்த பதவிக்கு ரங்கநாயகலு என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். பாஜக தமிழ்நாடு இளைஞரணி தலைவராக இருந்துவந்த வினோஜ் பி. செல்வத்துக்கு மாநிலச் செயலாளர் என்ற டம்மி பதவி கொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த இடத்துக்கு ரமேஷ் சிவா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, எஸ்.ஜி. சூர்யா, அஸ்வத்தாமன் போன்றவர்களுக்கும் மாநிலச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கின்றது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் துறைமுகம் தொகுதியில் சேகர் பாபுவை எதிர்த்துப் போட்டியிட்ட வினோஜ் பி. செல்வத்தை மாற்றிவிட்டு, சமூக வலைத்தளங்களில் அரசியல் செய்துகொண்டிருந்த இருவருக்கு அண்ணாமலை பதவி வழங்கியிருப்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
ஏற்கனவே மாவட்ட தலைவர்கள் பதவியில் தனது ஆதரவாளர்களின் எண்ணிக்கை பாதிக்குப் பாதியளவு குறைந்ததினால், மாநில நிர்வாகிகள் பட்டியலில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தன் ஆதரவாளர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று டெல்லி மேலிடத்தில் அடம்பிடித்து இந்த பட்டியலை ஓகே செய்திருக்கிறார் அண்ணாமலை.
இந்த அனைத்துக்கும் மேலாக, தற்போது பாஜக தமிழக சமூக ஊடகப் பிரிவின் தலைவராக சி.டி.ஆர்.நிர்மல் குமார் பதவிவகிக்கிறார். இவர் அதிகாரப்பூர்வ பாஜக சமூக வலைத்தளங்களில் அண்ணாமலையை பிரமோட் செய்வது போன்று எந்த ஒரு செய்தியையும் அனுமதிப்பது கிடையாது. கட்சி சார்ந்த அல்லது பிரதமர் மோடி சார்ந்த செய்திகளை மட்டுமே அதிக அளவில் பகிர்ந்து வந்தார். இந்த நிலையில், தமிழக சமூக ஊடகப் பிரிவு இரண்டாக உடைக்கப்பட்டு, அதில் தனது ஆதரவாளரை நியமிக்க அண்ணாமலை போட்டிருக்கும் திட்டம் நிர்மல் குமார் தரப்பைச் சூடேற்றியுள்ளது” என்றார்கள் சீனியர் உறுப்பினர்கள். இதே சலசலப்பு நீடித்தால், விரைவில் பல பூகம்பங்கள் வெடிக்கும் என்கிறது விவரமறிந்த தமிழக பாஜக வட்டாரம். என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!