`அதிகாரத்தின் கோர முகம்!' – `டாணாக்காரன்', `ஃபுல் மெட்டல் ஜாக்கெட்' படங்கள் சொல்லும் பாடங்கள்!

ஒரு செயலை அடைவதற்கோ, ஒரு பணியை முழுமையாகச் செய்யவோ, அதற்கென்று இருக்கும் முறையான பயிற்சி என்பது முக்கியமானதொரு தேவைதான். இந்தப் பயிற்சிக் காலம் என்பது நம் இலக்கை அடைவதற்கு ஏற்றவாறு, நம்மை நாமே வார்த்து எடுத்துக்கொள்ள உதவும் காலகட்டம். இந்தப் பயிற்சி பொழுதினை முழுமையாக எதிர்கொள்ளும் பொழுது நம் இலக்கு இன்னமும் எளிதாகிவிடும். இதற்கு ஆகச்சிறந்த உதாரணம், காவலர் பயிற்சிப் பள்ளிகள். அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள்தான் ஒரு காவலருக்கு அடிப்படையாக அமைகின்றன.

ஆனால், தொடர்ந்து அந்தப் பயிற்சி முறைகள் மீது பலவாறான விமர்சனங்கள், பல வகையான ஊடகங்களில் தொடர்ந்து பதியப்பட்டு வருகின்றன. செல்லுலாய்டிலும் இது குறித்த காரசார விமர்சனங்கள் அவ்வப்போது பதியப்படுவது உண்டு. இத்தகைய விமர்சனங்கள் தமிழ்த் திரையுலகில் குறைவுதான் என்றாலும் ஆங்கிலேயர் காலத்து அடிமைத்தன்மை கொண்ட பயிற்சி முறை இன்றும் நமக்குத் தேவையா என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

டாணாக்காரன் படத்தில்…

சமீபத்தில் வெளியான அறிமுக இயக்குநர் தமிழின் ‘டாணாக்காரன்’ திரைப்படம் இது குறித்த விவாதங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளது. இந்தப் படத்தைப் பார்த்ததும் நம் கண் முன்னே வந்த மற்றொரு திரைப்படம், திரையுலக மேதையான இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக் எடுத்த ‘ஃபுல் மெட்டல் ஜாக்கெட்’ (Full Metal Jacket).

போலீஸ் பயிற்சி எவ்வளவு கடினமானதாக இருக்கும், எவ்வளவு இரக்கமற்றதாக இருக்கும், எவ்வளவு போட்டி, பொறாமை, வன்மம் கொண்டதாக இருக்கும் என்பதை விளக்கும் திரைப்படங்கள்தான் இந்த ‘டாணாக்காரன்’ மற்றும் ‘ஃபுல் மெட்டல் ஜாக்கெட்’.

‘டாணாக்காரன்’ கடந்த ஏப்ரல் 8-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. விக்ரம் பிரபு, எம்.எஸ்.பாஸ்கர், லால் ஆகியோர் நடிக்க, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். தமிழ் இப்படத்தினை இயக்கியுள்ளார். ஒரு பயிற்சி மையத்தையே களமாகக் கொண்டு மொத்த படமும் நகர்கிறது. 90களின் இறுதியில் காவல்துறை பயிற்சிக்குச் செல்லும் இளைஞர்களுடன் 80களில் இருந்து வந்த ஒரு குழுவும் இணைந்து கொள்கிறது. பயிற்சிக் களத்தில் அவர்களுக்கு என்னென்ன பிரச்னைகள் வருகின்றன என்பதே திரைப்படத்தின் கதை. இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் தமிழ், காவல் அதிகாரியாக பணிபுரிந்தவர் என்பதால் அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களையும் புனைவையும் கலந்து இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

டாணாக்காரன்

இந்தத் திரைப்படத்தில் போலீஸ் பணிக்கான பயிற்சியில் அங்கு பரேட் வாத்தியார்களாக, உயர் அதிகாரிகளாக இருப்பவர்களின் மனிதநேயமற்ற செயல்களையும், அவர்களின் ஆதிக்கத்தையும் சமரசமின்றி பதிவு செய்துள்ளார். நிதர்சனத்தில் ஒரு போலீஸ் பணிக்கான பயிற்சியும் இதுபோல்தான் இருக்கும்; படத்தில் நடிகர் லால் ஏற்று நடித்திருக்கும் ஈஸ்வரமூர்த்தி கதாபாத்திரத்தைப் போன்று பலரை நிஜ வாழ்விலும் காணலாம் என்கிறார்கள் போலீஸ் பயிற்சியில் பங்கேற்றவர்கள்.

டாணாக்காரன்

சாதி பார்த்து ஒருவனைக் குறி வைக்கும் அதிகாரிகள், லஞ்சம் பெறும் அதிகாரிகள், தவறாகவே இருந்தாலும் அதிகாரிகளுக்குக் கும்பிடு போடும் சில பயிற்சி மாணவர்கள் எனத் தவறுகளின் கூடாரமாகப் பயிற்சி மையங்கள் மாறிப்போனது நம் சமூகத்தை அதிகாரத்தன்மை ஆண்டு கொண்டிருப்பதன் அடையாளங்கள். அதே சமயம், போலீஸ் பயிற்சியாளர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று பொதுமைப்படுத்திவிட முடியாது. எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் ஆகியோர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் போன்ற நியாயமானவர்களும் இருக்கவே செய்கிறார்கள் என்பதைப் படம் பதிவு செய்யத் தவறவில்லை.

இவற்றை எல்லாம் தாண்டி, காவல்துறைக்கான பயிற்சிக் களம் என்பது மனிதநேயமற்ற, பொறாமையுடைய, ஆதிக்கத் தன்மையுடைய செயல்கள் நிறைந்த இடமாகத்தான் இருக்கும் என்பதையும் சமரசமின்றி பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். குறிப்பாக, காவல்துறையைச் சேர்ந்தவர்கள் ஏன் பெரும்பாலும் மூர்க்கமாகச் செயல்படுகிறார்கள், அவர்கள் கோபத்தின் தொடக்கப்புள்ளி எது, கேள்வி கேட்கமுடியாததொரு அதிகாரத்தை அவர்கள் எப்படித் தங்களுடையதாக மாற்றிக்கொள்கிறார்கள் என உளவியல் ரீதியாகவும் ஆராய்கிறது இந்தப் படம்.

ஃபுல் மெட்டல் ஜாக்கெட்

இதே போலத்தான் 1987-ம் ஆண்டு ஸ்டான்லி குப்ரிக் இயக்கத்தில் வெளியான ‘ஃபுல் மெட்டல் ஜாக்கெட்’ திரைப்படமும். இது ‘ஷார்ட் டைமர்ஸ்’ என்னும் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ஒரு போருக்குத் தயார் ஆகும் வீரர்களின் பயிற்சி முறைகள் குறித்துக் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர். வியாட்நாம் போர் காலகட்டத்தில், சார்ஜன்ட் ஹார்ட்மென் என்ற மூத்த ட்ரில் பயிற்சியாளரின் கீழ் பயிற்சிபெறும் ராணுவ வீரர்கள் படும்பாடுதான் படம். அந்தப் பயிற்சி வகுப்புகள் மனிதநேயமற்ற செயல்களும் பொறாமையும் வன்மமும் நிறைந்த இடமாக இருக்கும்.

ஃபுல் மெட்டல் ஜாக்கெட்

‘டாணாக்காரன்’ படத்தில் உடல் எடை அதிகமாகக் கொண்டிருக்கும் முருகன் என்ற கதாபாத்திரம் சந்திக்கும் சிக்கல்களைப் படமாக்கி இருப்பார்கள். இந்தப் படத்திலும் லெனார்ட் லாரன்ஸ் என்ற பாத்திரம் அதேபோன்ற பிரச்னைகளைச் சந்திக்கும் ஒன்றாக எழுதப்பட்டிருக்கும். மனரீதியாகவும் அவர் பாதிக்கப்படுவார். இந்தக் கதாபாத்திரத்தில் நடித்த வின்சென்ட் டி ஆனோஃப்ரியோ (Vincent D’Onofrio) என்ற நடிகர், இந்தப் படத்துக்காக தன் உடல் எடையை 32 கிலோ ஏற்றியிருக்கிறார். ‘டாணாக்காரன்’ படத்தில் ஈஸ்வர மூர்த்தி கதாபாத்திரம் எப்படியோ, அப்படி இங்கே சார்ஜன்ட் ஹார்ட்மென். இப்படி நிறைய மனிதர்கள், நிறையச் சம்பவங்கள் அதிகார வர்க்கத்தின் கோர முகத்தை நமக்கு எடுத்துக் காட்டும்.

இந்தத் திரைப்படத்தில் பயிற்சியில் இருக்கும் வீரர்கள் தங்களின் துப்பாக்கிகளை தங்களின் இணையராகப் பாவித்துப் பேசும் “This is my rifle, this is my gun, this is for fighting, this is for fun” என்ற வசனத்தில் ஆபாச நெடி இருந்தாலும், அந்தப் பயிற்சிக்களத்தின் தன்மையினை சமரசமின்றி காட்சிப்படுத்துவதாக அது இருக்கும். இந்தியாவில் இந்தப் படத்தை ஆப்பிள் டிவி தளத்தில் காணலாம்.

ஃபுல் மெட்டல் ஜாக்கெட்

இந்த இரண்டு படங்களும் நமக்குச் சொல்லும் செய்தி ஒன்றுதான். எந்த நாடு, எந்தக் கலாசாரம், எந்தக் காலகட்டம் ஆயினும், அதிகாரத்தின் முகம் எல்லா இடத்திலும் ஒன்றுதான். அது நாம் என்றும் பார்க்கவே விரும்பிடாத ஒன்று!

Source link

Leave a Comment

Your email address will not be published.