அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: ஸ்டாலின் அரசு பொறுப்பேற்று, ஓராண்டு நிறைவு பெற்றிருப்பதைக் கொண்டாடும் விதமாக, ஆண்டுதோறும் சொத்து வரி உயர்வு போன்ற தண்டனைகளை பரிசாக மக்களுக்கு கொடுத்திருக்கின்றனர். எஞ்சிய நான்கு ஆண்டுகளில் இன்னும் என்னென்ன தண்டனைகளை வாரி வழங்கப் போகின்றனரோ? தமிழக மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
தமிழக மக்களை காப்பாற்ற கடவுளாவது இருக்கார்… 1996 தேர்தலில், ‘ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்டா, தமிழக மக்களை ஆண்டவனால கூட காப்பாற்ற முடியாது’ என நடிகர் ரஜினி கூறினாரே… அன்று ஜெயலலிதாவின் பின்னணியில் இருந்தவர்கள் யார்?
பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை: இலங்கையில், ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்களின் புரட்சி தீவிரமடைந்துள்ளது. போர்க் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆதாரங்களின் அடிப்படையில், முன்னாள் அதிபர் ராஜபக்சே சகோதரர்களை கைது செய்து, பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தண்டனை பெற்று தருவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும், பிற உலக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்.
மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது இல்லை என்பது தான், நேரு காலத்துல இருந்து நாம கடைப்பிடிக்கிற வெளியுறவு கொள்கை… அதை, ‘ஓவர்நைட்’ல எப்படி மாற்ற முடியும்?
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: கோவை மாவட்டம், ரங்கப்ப கவுண்டன்புதுாரில், 20 ஏக்கர் தரிசு நிலம் மேம்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை துவக்கி வைக்க, முதல்வர் ஸ்டாலின் மே, 19ல் வருகிறார்.
இதற்காக ரங்கப்ப கவுண்டன்புதுாரில் இருந்து முகாசி செம்சம்பட்டி செல்லும் வழியில், 10க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. இது, கடும் கண்டனத்துக்குரியது.அது சரி… ‘நிலம் தரிசா இருந்தா தானே மேம்படுத்த முடியும்’ என கருதி, மரங்களை எல்லாம் வெட்டி, பொட்டல் காடாக்கிட்டாங்க போல!
வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் முருகையன், தலைவர் குமரேசன் அறிக்கை: 1972ல் முதல்வர் கருணாநிதியால், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், தற்போது காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது வேதனையின் உச்சம்.2003ல் ஜெயலலிதா இதை நிறுத்தியபோது, அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து, 2004 லோக்சபா தேர்தலில் அவருக்கு தகுந்த பாடம் புகட்டியதை அரசுக்கு நினைவூட்டுகிறோம்.
கடந்த, 2003ல் ஸ்டிரைக், 2004ல் தேர்தல்னு, ‘ஷார்ப்’பா, ‘எடிட், கட்’ பண்றீங்களே… வேலை நிறுத்தம் செய்ததுக்காக, 1.50 லட்சம் ஊழியர்களை ஜெயலலிதா, ‘டிஸ்மிஸ்’ செய்து, ‘பாடம்’ புகட்டியதையும், கெஞ்சி கூத்தாடி எல்லாரும் மறுபடி வேலைக்கு வந்ததையும் வசதியா மறைச்சிட்டீங்களே!