அப்பாடா…மும்பை முதல் வெற்றி * சறுக்கியது ராஜஸ்தான் அணி

நவி மும்பை: ‘டி–20’ தொடரில் முதல் வெற்றி பெற்றது மும்பை அணி. நேற்று நடந்த லீக் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது.

நவி மும்பையில் நேற்று நடந்த ‘டி–20’ போட்டியில் ஐந்து முறை சாம்பியன் மும்பை அணி, ராஜஸ்தானை சந்தித்தது. நேற்று 35 வது பிறந்தநாள் கொண்டாடிய மும்பை கேப்டன் ரோகித் சர்மா ‘டாஸ்’ வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

மும்பை அணியில் உனத்கட், பிரெவிஸ் நீக்கப்பட்டு கார்த்திகேயா, டிம் டேவிட் சேர்க்கப்பட்டனர். ராஜஸ்தான் அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

படிக்கல் ஏமாற்றம்

ராஜஸ்தான் அணிக்கு பட்லர், தேவ்தத் படிக்கல் ஜோடி துவக்கம் கொடுத்தது. பும்ரா பந்தில் பட்லர், பவுண்டரி அடிக்க, மறுபக்கம் சாம்ஸ் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசினார் படிக்கல். இவர் 15 ரன் மட்டும் எடுத்த நிலையில் ஹிரித்திக் ‘சுழலில்’ அவுட்டானார்.

வழக்கமாக ‘வேகமாக’ ரன் சேர்க்கும் பட்லர், நேற்று மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். திடீரென ‘வேகம்’ எடுத்த பட்லர், ஹிரித்திக் ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரி அடித்தார்.

சாம்சன் ‘அவுட்’

ஹிரித்திக் வீசிய போட்டியின் 7வது ஓவரில் இரண்டு சிக்சர் விளாசினார் கேப்டன் சாம்சன். 7 பந்தில் 16 ரன் எடுத்த சாம்சன், கார்த்திகேயா  பந்தில் சரிந்தார்.

போலார்டு, கார்த்திகேயா பந்துகளில் பட்லர் பவுண்டரி அடித்த போதும், ராஜஸ்தான் அணி 10 ஓவரில் 73/2 ரன் தான் எடுத்தது. அடுத்த மூன்று ஓவர்களில் (11–13) ஒரு பவுண்டரியும் அடிக்காமல் போக, ஸ்கோர் ஆமை வேகத்தில் உயர்ந்தது.

பட்லர் அரைசதம்

மூன்றாவது விக்கெட்டுக்கு 41 பந்தில் 37 ரன் மட்டும் எடுத்த நிலையில் ஒரு வழியாக மிட்செல் (17) அவுட்டானார். மனம் தளராத பட்லர், ஹிரித்திக் வீசிய 16வது ஓவரில் சிக்சர் மழை பொழிந்தார்.

முதல் நான்கு பந்துகளில் தொடர்ந்து சிக்சர் அடித்த பட்லர், இத்தொடரில் மூன்றாவது அரைசதம் கடந்தார். இதே ஓவரின் கடைசி பந்தில் பட்லரை (67) அவுட்டாக்கினார் ஹிரித்திக்.

அடுத்த சில நிமிடங்களில் ரியான் பராக்கும் (3) வெளியேறினார். பின் வந்த அஷ்வின், மெரிடித்தின் 3வது ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். இவர் 21 ரன்னுக்கு அவுட்டானார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன் மட்டும் எடுத்தது. ஹெட்மயர் (6 ரன், 14 பந்து), பவுல்ட் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

சூர்யகுமார் அபாரம்

மும்பை அணிக்கு ரோகித் சர்மா (2), இஷான் கிஷான் ஜோடி மீண்டும் மோசமான துவக்கம் தந்தது. இஷான் 26 ரன் எடுத்தார். பின் இணைந்த சூர்யகுமார், திலக் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சூர்யகுமார் 13வது அரைசதம் விளாசினார். 3 வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்த போது சூர்யகுமார் (51), திலக் (35) அடுத்தடுத்து அவுட்டாகினர். போலார்டு 10 ரன் எடுத்தார்.

கடைசியில் சாம்ஸ் ஒரு சிக்சர் அடிக்க மும்பை அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 161 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தொடர்ச்சியான 8 தோல்விக்குப் பின் மும்பை பெற்ற முதல் வெற்றி இது. டிம் டேவிட் (20), சாம்ஸ் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

பிறந்த நாள் பரிசு

மும்பை அணிக்கு ஐந்து முறை ஐ.பி.எல்., கோப்பை வென்று தந்தவர் ரோகித் சர்மா. நேற்று இவருக்கு 35வது பிறந்தநாள்.

இத்தொடரில் தொடர்ந்து 8 போட்டிகளில் தோற்று ‘பிளே ஆப்’ வாய்ப்பை இழந்த நிலையில், 9 வது போட்டியில் ராஜஸ்தானை வென்றது பிறந்தநாள் பரிசாக அமைந்தது.

 

100

படிக்கல் அடித்த பந்தை பிடித்த போலார்டு, ஐ.பி.எல்., அரங்கில், பவுண்டரி எல்லைப் பகுதியில் மட்டும் 100வது ‘கேட்ச்’ செய்த இரண்டாவது வீரர் ஆனார். இவ்வரிசையில் 109 கேட்ச்’ செய்த ரெய்னா, முதலிடத்தில் உள்ளார்.

 

பட்லர் ‘500’

ராஜஸ்தானின் பட்லர் நேற்று முதல் ரன் எடுத்த போது, இத்தொடரில் 500 ரன்கள் எடுத்த முதல் வீரர் ஆனார். 

* ஐ.பி.எல்., தொடரில் குறைந்த இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டிய வீரர்களில் இரண்டாவது இடம் பெற்றார்.

* தவிர, கெய்ல் (2011), வார்னர் (2019), ராகுலுடன் (2020) இரண்டாவது இடத்தை பட்லர் பகிர்ந்து கொண்டார். இவர்கள் 9 இன்னிங்சில் இந்த இலக்கை எட்டினர். 

* 2016 சீசனில் 8 இன்னிங்சில் 500 ரன்களை எட்டிய கோஹ்லி ‘முதல்வனாக’ உள்ளார்.

 

566

மும்பைக்கு எதிராக எப்போதும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவார் பட்லர். கடைசி 5 போட்டிகளில் பட்லர் 94, 89, 70, 41, 100 ரன் விளாசினார். நேற்று 67 ரன் எடுத்தார்.

* இதுவரை 566 ரன் எடுத்த பட்லர், ராஜஸ்தான் அணிக்காக ஒரு சீசனில் அதிக ரன் குவித்த வீரர் ஆனார். இதற்கு முன் 2012 தொடரில் 560 ரன் விளாசிய ரகானே, 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அடுத்தடுத்த இடங்களில் பட்லர் (548, 2018), வாட்சன் (543, 2013), ரகானே (540, 2015) உள்ளனர்.

 

‘ஹெல்மெட்’ அடி

மும்பை வீரர் மெரிடித் வீசிய பந்து (5.5 வது ஓவர்), பட்லர் ‘ஹெல்மெட்’ வலது பக்கம் தாக்கியது. அதில் இருந்து பாதுகாப்பு பகுதி (‘ஸ்டெம் கார்டு’) கீழே விழுந்தது. ‘பிசியோதெரபிஸ்ட்’ உட்பட மருத்துவ குழுவின் சோதனைக்குப் பின் மீண்டும் பேட்டிங் செய்தார் பட்லர்.

Advertisementவருக

Leave a Comment

Your email address will not be published.