இந்திய – அமெரிக்கரான அருண் வெங்கடராமன், உலகளாவிய சந்தைகளுக்கான வர்த்தக துணை செயலாளராகவும், அமெரிக்கா மற்றும் சர்வதேச வர்த்தக நிர்வாகத்திற்கான வெளிநாட்டு வணிகச் சேவையின் இயக்குநர் ஜெனரலாகவும் ஏப்ரல் 25, திங்கள் அன்று பதவியேற்றார். அவர் இந்தப் பதவியில் நியமிக்கப்படுவதற்கு முன்பு வர்த்தக செயலாளரின் ஆலோசகராக பணியாற்றியதோடு, வர்த்தகம் மற்றும் பிற சர்வதேச பொருளாதார விஷயங்களில் ஆலோசனை வழங்கி வந்துள்ளார்.
தற்போது அமெரிக்கா முழுவதும் உள்ள 106 அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 78 மார்கெட்களில் 1,400 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட குழுவுக்கு, வெங்கடராமன் தலைமை தாங்க உள்ளார். இவர் அதிபர் ஜோ பைடனால் நியமிக்கப்பட்டார்.
“வணிக சட்டம் மற்றும் கொள்கையில் அருண் வெங்கடராமனின் நிபுணத்துவம் ஒரு விலைமதிப்பற்ற சொத்து. அமெரிக்காவின் பொது துறை மற்றும் தனியார் துறைகளின் முக்கியமான வர்த்தக சவால்களை சமாளிக்க, அவரது அனுபவமும் தலைமைத்துவமும் உதவியது. இது அவருக்கு அரசாங்கத்திற்கு உள்ளேயும், வெளியேயும், இப்போது வழிநடத்த நியமிக்கப்பட்டுள்ள குழுவிலும் மரியாதையை ஈட்டியது; அவரின் புதிய பொறுப்பில் அவரோடு பணிபுரிய காத்திருக்கிறேன்” என வெங்கட்ராமனுக்கு சத்தியப்பிரமாணம் செய்த வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ குறிப்பிட்டுள்ளார்.