Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்அமைச்சராக இருந்தாலும் சைடு பிசினசாக ஜோதிடமும் பார்ப்பீர்கள் போல் தெரிகிறது...| Dinamalar

அமைச்சராக இருந்தாலும் சைடு பிசினசாக ஜோதிடமும் பார்ப்பீர்கள் போல் தெரிகிறது…| Dinamalar

தமிழக கல்வி அமைச்சர் மகேஷ் பேட்டி; முதல்வர் ஸ்டாலின் நல்ல கைராசிக்காரர் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டேன் என கவர்னர் சொல்லக்கூடிய நிலை உள்ளது. தற்போது, போதுமான மழை பெய்து, நல்ல சூழல் உள்ளது. எனவே, முன்கூட்டியே டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது

அமைச்சராக இருந்தாலும் சைடு பிசினசாக ஜோதிடமும் பார்ப்பீர்கள் போல் தெரிகிறது. பேசாம, ‘ராசி தான் கைராசி தான், உன் முகமே ராசி தான்’ என்ற பாடலை முதல்வருக்கு டெடிகேட் பண்ணிடுங்க!

பா.ஜ., தேசிய சிறுபான்மை அணி செயலர் வேலுார் இப்ராஹிம் பேட்டி: அரசியல் அமைப்பு சட்டத்தின் 48வது பிரிவு, பசுவையோ, அதன் கன்றையோ இறைச்சிக்காக கொல்லக் கூடாது என்று கூறுகிறது. அதன் அடிப்படையில், பசுவதைக்கு எதிராக பா.ஜ., குரல் கொடுத்து வருகிறது. ஆனால், ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையிலும், மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும், மாட்டுக்கறி விருந்து வைப்பதாக தி.க., வினர், திருமாவளவன் போன்றோர் செயல்படுகின்றனர்.

வாஸ்தவம் தான்… ‘எங்களுக்கு மாட்டுக்கறி விருந்து வையுங்க’ என்று, இவர்கள் வீட்டு வாசலில் போய் யாராவது நின்றனரா என்ன?

தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி பேட்டி: மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்த போது, 2014 வரை தமிழகத்திற்கு ஆண்டுக்கு சராசரியாக, 879 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மட்டும், 3,865 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, மிகவும் சிறப்பான விஷயம். ஆனால், தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என, தி.மு.க.,வினர் தவறான தகவல்களை பரப்புகின்றனர்.

எதிர்க்கட்சியினர் அப்படித்தான் கூறுவர்… மத்தியில ஆளுங்கட்சியான நீங்க தான், அந்த பொய் பிரசாரங்களை முறியடிக்க வேண்டும்!

தமிழக சித்தா மருத்துவமனை மற்றும் கிளினிக் சங்கத் தலைவர் ஜெயவெங்கடேஷ், செயலர் செந்தில்குமார் பேட்டி: தமிழகத்தில், 49 கோவில்களில் சித்த மருத்துவமனை அமைக்க, 1970ல் அரசாணை வெளியிட்டும், ஆறு கோவில்களில் மட்டுமே மருத்துவமனைகள் செயல்படுகின்றன. பழநி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி உட்பட 44 கோவில்களில், சித்த மருத்துவமனை ஏற்படுத்தலாம் என தமிழக அரசு பரிந்துரை செய்தும், திட்டம் கிடப்பில் உள்ளது.

ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவின் கனிவான கவனத்திற்கு…மக்கள் நீதி மய்யம் பேச்சாளரான, ‘வியாசை’ முரளி பேட்டி: இன்று திராவிட கட்சிகளின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் பேச்சாளர்களே. இதை உணர்ந்தே, மக்கள் நீதி மய்யத்திலும் பேச்சாளர்களுக்கு என, ஒரு தனி அணி உருவாக்கப்பட்டிருந்தது. கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு, எங்களுக்கு அதிகம் உண்டு.

திராவிடக் கட்சி பேச்சாளர்கள் பாணியில, நாலாந்தர நடையில நாராசமாக பேசிடாதீங்க!

அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் அறிக்கை: மூத்த குடிமக்களை செல்வமாக கொண்டாடும் நாடு தான் நன்றி மிகுந்தவர்கள் தேசமாக இருக்க முடியும். முதியோர்களுக்கான ரயில் கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டதால், அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. இதை நினைக்காமல் அவர்களுக்குரிய சலுகையை உடனடியாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

latest tamil news

கடந்த 1963ம் வருடம் பிறந்த தங்களுக்கு வயது 59 ஆகுது, சீக்கிரமே சீனியர் சிட்டிசன் ஆகப்போறீங்க.. கண்டிப்பாக உங்க கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும்

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை: நெய்வேலி, என்.எல்.சி., சுரங்கங்களை விரிவாக்கவும், புதிதாக மூன்றாவது சுரங்கம் அமைக்கவும், 49 கிராமங்களில் இருந்து, 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்.எல்.சி.,க்காக இனி ஒரு கைப்பிடி மண்ணை கூட எடுக்க, பா.ம.க., அனுமதிக்காது. கடலுார் மாவட்ட மக்களை திரட்டி, நானே தலைமையேற்று போராட்டம் நடத்துவேன்.

எது எப்படியோ… கடலுார் மாவட்டத்துல இன்னும் கொஞ்ச நாளைக்கு நீங்க தான், ‘லைம் லைட்’டில் இருக்கப் போறீங்க என்பது தெரியுது!

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிக்கை: கருணாநிதி காலம் கல்லுாரியின் பொற்காலம்; தற்போதைய ஆட்சிக் காலம், உயர்கல்வியின் பொற்காலம் ஆக வேண்டும் என திட்டமிட்டு செயல்படுவதாக, சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவில், முதல்வர் கூறி இருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. அ.தி.மு.க.,வின் சாதனையை மறைத்ததோடு, அதை தி.மு.க., சாதனையாக பறைசாற்றிக் கொள்வது கண்டிக்கத்தக்கது. பள்ளிக்கல்வியாக இருந்தாலும், உயர்கல்வியாக இருந்தாலும், அனைத்திலும் சாதனை படைத்தது, அ.தி.மு.க., ஆட்சி தான்.

கல்லுாரி மாணவர்கள் படிக்காம, பரீட்சையே எழுதாம உங்க ஆட்சியில, ‘ஆல் பாஸ்’ போட்டு விட்டீங்களே… அதெல்லாம் சாதனை கணக்கில் சேரும் தானே!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை: ஏற்கனவே மத்திய அரசின் அவசர, அலங்கோல ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், பாதிக்கப்பட்ட கொங்கு மண்டலம், அதில் இருந்து இன்னும் மீளவில்லை. பருத்தி, நுால் விலை உயர்வால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தமிழகம் தானே என, பிரதமர் மோடி அரசு அலட்சிய போக்கை கடைப்பிடித்தால், அதற்கான விலையை நிச்சயம் தர வேண்டியதிருக்கும்.

மத்தவங்க அலட்சியத்தை பத்தி பேசுறது இருக்கட்டும்… பேரறிவாளன் விடுதலையை கண்டிச்சு, நீங்களும் தான் போராட்டம் நடத்துனீங்களே… தி.மு.க., அரசு, துரும்பளவாது உங்களை சட்டை செஞ்சுதா?

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments