Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்அரியலூர்: கலெக்டர் புகைப்படம்; டிஜிட்டல் மோசடி முயற்சி - ஆட்சியரின் அலெர்ட்டால் தப்பிய அதிகாரிகள்

அரியலூர்: கலெக்டர் புகைப்படம்; டிஜிட்டல் மோசடி முயற்சி – ஆட்சியரின் அலெர்ட்டால் தப்பிய அதிகாரிகள்

பணத்துக்காக ’ஹவுஸ் பிரேக்கிங், பீரோ புல்லிங்’ போன்ற வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் குறைந்தாலும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பொதுமக்களின் வங்கிப் பணத்தை கொள்ளையடிப்பது அதிகரித்து வருகிறது. இதில், பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சியரையே அது போன்ற டிஜிட்டல் கொள்ளையர்கள் டார்கெட் செய்த சம்பவமும், அதை அவர் சாதுர்யமாக கையாண்டு அரசு அதிகாரிகள் சிலரை காப்பாற்றிய விதமும் மாவட்டத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

அரியலூர்

’என்னதான் நடந்தது? அரசு அதிகாரிகளின் வங்கிப் பணம் கொள்ளை போகாமல் மாவட்ட ஆட்சியர் தடுத்தது எப்படி?’ என்பதை அறிவதற்காக அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதியிடம் பேசினோம்.

“18.05.2022 அன்று மதியம் சுமார் 1.50 மணியளவில் சேம்பரில் நான் இருக்கும்போது, என்னோட பர்சனல் கிளர்க் சவுந்தரராஜனின் வாட்ஸ் அப் நம்பருக்கு, ‘என்ன ராஜா, என்ன பண்ணிட்டு இருக்கீங்க?’ எனக் கேட்டு ஆங்கிலத்தில் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது. புது நம்பரில் இருந்து அந்த மெசேஜ் வந்த காரணத்தால், ‘நீங்கள் யார்? என கேட்டிருக்கிறார் ராஜா. அதற்கு, ’என்னோட டி.பி.யை (Display Picture) நீங்க செக் பண்ணலையா?’ என பதில் வந்திருக்கிறது.

அரியலூர் கலெக்டர்

அப்போதுதான் அதில் என்னுடைய புகைப்படம் இருப்பதை பார்த்துள்ளார் பெர்சனல் கிளர்க் ராஜா. உடனே அது நானாகத்தான் இருக்க வேண்டும் என நம்பிய அவர், அவசர அவசரமாக கதவைத் திறந்து, `சாரி மேடம். நீங்க கூப்பிட்டதை கவனிக்கல’ என்றார். குழம்பிப் போன நான், என்னுடைய புரோஃபைல் பிக்சரோடு அவருக்கு வந்த அந்த மெசேஜை பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ‘எனக்கு கொஞ்சம் ‘கிஃப்ட் கூப்பன்’ வாங்கணும். நான் வேலையா இருக்கிறதால நீங்களே 10 கூப்பன் வாங்கிடுங்க. ஒரு கூப்பனோட ரேட் பத்தாயிரம்’ என்ற மெசேஜும் அதோடு ஒரு லிங்க்கும் வந்தது.

உடனே, என்னோட பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி ஏதோவொரு ஏமாற்று வேலை நடக்கப்போகிறது என சுதாரித்த நான், இது பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே, குறிப்பிட்ட அந்த நம்பரில் இருந்து, ‘கூப்பனை சீக்கிரம் வாங்கி எனக்கு அனுப்புங்க. அதை நான் சிலருக்கு தர வேண்டியதிருக்கு. அதுக்கான பணத்தை இன்னைக்கே உங்களுக்கு கொடுத்திடுறேன்’ என மாவட்ட கலெக்டரான நான் சொல்வது போலவே அவசரப்படுத்தி சில மெசேஜுகள் வந்தன.

அவசரப்படுத்தி சில மெசேஜுகள்

உடனே அந்த நம்பருக்கு கான்டேக்ட் பண்ணிப் பார்க்கும் போது, யாரோ ஒருவர் ஹிந்தியில் பேசவே அதிர்ச்சியடைந்த நான், ‘இது சம்பந்தமாக மாவட்டத்தில் உள்ள வேறு சில அதிகாரிகளை தொடர்பு கொண்டு உஷார் படுத்தியதோடு, மாவட்ட எஸ்.பி.க்கும் தகவல் தந்தேன். அப்போதுதான், இதேபோல, பத்தாயிரம் மதிப்புள்ள 10 அமேசான் கிஃப்ட் கூப்பனை உடனே பர்ச்சேஸ் செய்து எனக்கு அனுப்புமாறு மாவட்ட திட்ட இயக்குநருக்கும், என்னுடைய நேரடி உதவியாளருக்கும் அதே நம்பரில் இருந்து மெசேஜ் வந்த விஷயம் எனக்கு தெரியவந்தது.

இதற்கிடையே என்னுடைய அலுவலகத்திற்கு விரைந்து வந்த 2 சைபர் க்ரைம் போலீஸார் குறிப்பிட்ட அந்த நம்பரில் இருந்து வந்த மெசேஜுகளை ஆய்வு செய்து கொண்டிருக்கும் போதே, மறுபடியும் மறுபடியும் அந்த கூப்பன்களை பர்ச்சேஸ் செய்யுமாறு அர்ஜன்ட் படுத்தி வாட்ஸ்அப் வந்து கொண்டிருந்தது. உடனே மாவட்டத்தில் உள்ள மற்ற அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கும் கூட எனது பெயர், புகைப்படத்தோடு 7061656848 என்ற நம்பரில் இருந்து வரும் தகவல்களை நம்பி யாரும், எதையும் பர்ச்சேஸ் பண்ண வேண்டாம்.

அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி

உங்கள் பணம் பறிபோய்விடும்’ என தகவல் தெரிவித்ததோடு எனது வாட்ஸ் அப்பிலும் அதை ஸ்டேடஸாகவே வைத்துவிட்டேன். தற்போது, சைபர் க்ரைம் போலீஸார் அந்த மோசடி கும்பல் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். எந்த ஒரு உயர் அதிகாரியாவது அதை வாங்கிட்டு வாங்க, இதை வாங்கிட்டுவாங்கன்னு ஒரு மெசேஜ் வந்தா கண்டிப்பாக அந்த அதிகாரியிடம் கேட்டுக்கொண்டு செயல்படுங்கள். இது காலத்தின் கட்டாயம்” என்றார் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி.

மாவட்ட ஆட்சியர் பெயரைப் பயன்படுத்தி மாவட்ட உயரதிகாரிகளிடமே மோசடி செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஃபெரோஸ்கான் அப்துல்லாவிடம் பேசினோம். “குறிப்பிட்ட அந்த மோசடி நபரின் எண்ணானது பீகாரில் இருப்பதாக எங்களின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அரியலூர் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா

அமேசான் போன்ற பெரிய நிறுவனங்களின் கூப்பன்களை வாங்குமாறு அவர்கள் கூறினாலும், சாஃப்ட்வேர் மூலமாக அமேசான் என்ற பெயரில் போலியாக லிங்க் உருவாக்கி வைத்திருப்பார்கள். அதை யார் க்ளிக் செய்தாலும், அமேசானில் இருந்து வருவது போலவே உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபி வரும்.

அதை ’இன்புட்’ செய்தால் போதும், அடுத்த வினாடியே உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள அத்தனை பணமும் அந்த மோசடிக்காரர்களின் வங்கிக் கணக்கிற்கு சென்று விடும். அதை அவர்கள் உடனடியாக எடுத்து விடுவார்கள். பெரும்பாலும் இது போன்ற வொயிட் காலர் கிரிமினல்கள் இன்டர்நெட் மொபைல் மூலம் மட்டுமே அதிகம் தொடர்பு கொள்வதால்,

சுந்தர் ராஜனுக்கு அனுப்பிய மெசேஜ்

அவர்களின் உண்மையான இருப்பிடம் பற்றி தெரிந்து கொள்வதும், அவர்களிடமிருந்து மீட்பதும் மிகவும் சிரமமான வேலை. நல்ல வேலையாக மாவட்ட ஆட்சியர் சுதாரித்த காரணத்தால் மிகப்பெரிய அளவில் நடக்கவிருந்த ஒரு மோசடி தடுக்கப்பட்டு விட்டது. பொதுமக்கள் அனைவருமே இதுபோல வரும் மெசேஜுகளுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது. எக்காரணம் கொண்டும் அவர்களிடமிருந்து வரும் லிங்க்களை ’க்ளிக்’ செய்து விடக்கூடாது” என்றார் எஸ்.பி. ஃபெரோஸ்கான் அப்துல்லா.

அரியலூர் கலெக்டர்

`அசத்தல் அரியலூர்’ திட்டம் உருவாக்கி பொதுமக்களின் குறைகளை களையும் முயற்சிகளை எடுத்துவரும் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, தனது அதிகாரிகளையும் மோசடி வலையில் சிக்காமல் பாதுகாத்த விஷயம் பேசு பொருளாகி விட்டது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments