தனியாருக்கு சொந்தமான நிலமாக இருந்தாலும், அரசுக்கு சொந்தமான பொது இடங்களாக இருந்தாலும் பனை மரங்களை வெட்டக் கூடாது… தவிர்க்க முடியாத காரணங்களால், வெட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், மாவட்ட ஆட்சியரிடம் முறையாக விண்ணப்பித்து, அவர் ஆய்வு செய்து, ஒப்பதல் அளித்த பிறகே வெட்டலாம் எனத் தமிழக அரசு அரசாணை இயற்றியுள்ளது. ஆனால், திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பனை மரங்கள் அழிக்கப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக தற்போது, வெவ்வேறு இடங்களில் செழிப்பாக விளைந்திருந்த மிகவும் பழைமையான பனை மரங்கள், தீ வைத்தும், திராவகம் ஊற்றியும் அழிக்கப்பட்ட அவலம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களைப் பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. பனை மரங்களைப் பாதுகாக்க தமிழ்நாடு பனைப் பொருள்கள் வளர்ச்சி வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.
கடந்த சில மாதங்களாக, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கனக்கான பனை மரங்கள் வெட்டப்பட்டு, திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சாயத் தொழிற்சாலைகளுக்குக் கொண்டு செல்லப்படு கின்றன. செங்கல் காலவாய்களுக்காகவும் அதிக அளவில் பனை மரங்கள் வெட்டப்படுகின்றன. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் உள்ள பனை மரங்களைத் திருட்டுத்தனமாக வெட்டி எடுத்துச் செல்வதோடு மட்டுமல்லாமல். விவசாய நிலங்களில் உள்ள பனை மரங்களை, ஒரு மரத்துக்கு 200 ரூபாய் வீதம் விலை கொடுத்து வியாபாரிகள் வாங்கிச் செல்கிறார்கள். சுற்றுச்சூழலுக்கு பல வகைகளிலும் பெரும் துணையாக உள்ள பனை மரங்களைப் பாதுகாக்க தமிழக அரசு சிறப்புத் திட்டங்களையும், கடுமையான சட்டங்களையும் உருவாக்க வேண்டும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.