ஆதிதிராவிட விவசாயிகள் 1,000 பேருக்கு தட்கல் மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி வெளியிட்ட அறிவிப்பில், “1,000 ஆதி திராவிட விவசாயிகளுக்கு சுமார் 23.37 கோடி செலவில் 90 சதவிகித மானியத்தோடு தட்கல் மின் இணைப்பு வழங்கப்படும். பட்டியலினத்தவர் மற்றும் பட்டியலினத்தை சேர்ந்த பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சுமார் 200 பேருக்கு, நிலம் வாங்க ஐந்து லட்சம் வரை மானியம் வழங்கப்படும். வீடுகள் இல்லாத துாய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் 500 பேருக்கு, வீடு வாங்க 55 கோடி ரூபாய் மானியமானது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் வழங்கப்படும் .
அதுமட்டுமில்லாமல் இச்சமூகத்தை சேர்ந்த இளநிலை, முதுகலை மாணவர்கள் போட்டி தேர்வுகளை எழுதி வேலை வாய்ப்பினை பெற்றிட 10 கோடி ரூபாய் செலவில் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும். மகளிருக்கான சுய உதவி குழுக்களுக்கு தொழில் திட்டம் குறித்த பயிற்சிகள் 2.50 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படுவதோடு, மகளீர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கமானது 40 லட்ச செலவில், மாவட்டங்களில் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் 500 பேருக்கு கறவை மாடுகள் வாங்க தாட்கோ திட்டத்தின் கீழ் 2.25 கோடி மானியமாக வழங்கப்படும். 50 பேருக்கு ஆவின் பாலகம் அமைக்க 1.50 கோடியும், 100 பேருக்கு தமிழகத்தில் சிமெண்ட் கழக விற்பனை நிலையம் அமைக்க 3 கோடியும் மானியமாக வழங்கப்படும்.
அதனை தொடர்ந்து அழிந்து வரக்கூடிய ஆறு பண்டைய பழங்குடியின கலாசாரம் மற்றும் இனவரைவியல், ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் 50 லட்ச செலவில் ஆவண செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் ” என பட்டியலின, பழங்குடி மக்களுக்கான நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.