இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்த நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலகவேண்டும் என மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான், இன்று மதியம் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை அவர் அதிபர் கோத்தபயவுக்கு அனுப்பியிருக்கிறார்.
இருப்பினும், மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டம் நடத்தியவர்களின் மீது ஆளும் அரசின் ஆதரவாளர்கள் சிலர் இன்று தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், மூன்று பேர் படுகாயமடைந்தனர். அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சற்று முன்பு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் காரணமாக, அந்தப் பகுதியில் பெரும் கலவரம் வெடித்தது.
இந்த நிலையில்தான், ஆளும்கட்சியைச் சேர்ந்த எம்.பி அமரகீர்த்தி அத்துகொரலா தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், ஆளுங்கட்சி ஆதரவாளர்களை ஏற்றிவந்த பேருந்து ஒன்றுக்கும் மாலிகாவத்தை பகுதியில் தீ வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, மொரட்டுவை பகுதி மேயரின் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டு, அவரின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவமும் இன்று அரங்கேறியிருக்கிறது.
பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்து, அசாதாரண சூழல் நிலவுவதால் பதற்றமான பகுதிகளில் ராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.