உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
அ.நாகசுந்தரம், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அரசியல்வாதி என்ற போர்வையில், ஊர் ஊராக மேடைக்கு மேடை, பிரதமர் மோடியையும், பா.ஜ., கட்சியையும், ஹிந்து தெய்வங்களையும் மிக அசிங்கமாகவும், கீழ்த்தரமாகவும் பேசுவது வாடிக்கை. அது, அவரின் அரசியல் பிழைப்பாகவே தமிழக மக்களால்பார்க்கப்படுகிறது.
தற்போது வெளிமாநிலம் போய், பல நுாறு பேர் மத்தியில், பிரதமர் மோடியை வில்லன் என சர்ச்சையாக பேச, எதிர்ப்பு குரல் எழ, பேச்சை நிறுத்தி விட்டு ஓட வேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளார். கர்நாடக மாநிலம், சர்ஜாபூரில் தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அம்பேத்கர் இயக்கத்தின் அழைப்பை ஏற்று, விழாவுக்கு சென்று மேடையில் பேசிய திருமாவளவன், திராவிட மாடல் பாணியில், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து உள்ளார். அவரின் குரூரமான பேச்சை சகிக்க முடியாத அம்பேத்கர் இயக்கத்தினர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவருக்கு கொடுத்த கேடயத்தையும் திரும்ப வாங்கிக் கொண்டு, மேடையை விட்டு இறங்கிச் செல்லும்படி கூறியுள்ளனர்.
அத்துடன், ‘மோடி தான் எங்கள் நாட்டின் ஹீரோ’ என்றும், திருமாவின் முன்பே, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆவேசமாக பேசிஉள்ளார்.பூனை கண்ணை மூடிக் கொண்டால், உலகமே இருண்டது போல நினைக்குமாம். அதுபோல, நாம் பேசுவதை ஆமோதித்து கைதட்டி ஆரவாரம் செய்வர் என நினைத்த திருமாவுக்கு கிடைத்த பரிசு மூக்கறுப்பு. கர்நாடக மக்களை போலவே, தமிழர்களும் மானம், ரோஷம், சூடு சொரணையோடு தான் இருக்கின்றனர்.
ஆனால், ஓடும் சாக்கடையில் கல்லெறிந்தால், அது நம் மீது பட்டு நாறுமே என்ற நல்ல எண்ணத்தில், திருமாவின் பேச்சுக்கு பதிலடி கொடுப்பதில்லை; அமைதி காக்கின்றனர். கர்நாடக மாநில சம்பவம், திருமாவளவனுக்கு நல்ல பாடமாகும். வாய் இருக்கிறது என வம்பு பேசினால், அதை முறியடிக்கும் வல்லவனும் வையகத்தில் உண்டு என, கர்நாடக மாநில இளைஞர்கள் உணர்த்தி உள்ளனர். கூடா நட்பால் பாதை மாறி, ஹிந்துக்கள் பற்றியும், தேசத் தலைவர்கள் பற்றியும் இனியும் திருமாவளவன் இழிவாக பேசினால், ஊருக்கு ஊர் துரத்தப்படுவது நிச்சயம்.