வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நேபாள முன்னாள் துாதரின் மகளும், பத்திரிகையாளருமான சும்னிமா உதாசின் திருமண நிகழ்வில், காங்., – எம்.பி., ராகுல் பங்கேற்றது சர்ச்சையாகி உள்ள நிலையில், இந்திய ஒருமைப்பாட்டிற்கு சவால் விடுக்கும் நபர்களுடன், ராகுல் நட்பு பாராட்டி வருவதாக பா.ஜ., சாடி உள்ளது.
காங்., – எம்.பி., ராகுல், நம் அண்டை நாடான நேபாளத்தில், இரவு விடுதியில் நடந்த கொண்டாட்டத்தில் பங்கேற்ற ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை வைத்து, பா.ஜ., தலைவர்கள் ராகுலை விமர்சித்தனர். இதற்கு பதிலளித்த காங்., பொதுச் செயலர் ரந்தீப் சுர்ஜேவாலா, ‘சில ஆண்டுகளுக்கு முன், பாக்., பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிபின் பிறந்த நாளை கொண்டாட, பிரதமர் மோடி அழைக்காமலே சென்றார்.
‘ஆனால், ராகுல் தன் தோழியும், பத்திரிகையாளருமான சும்னிமா உதாசின் திருமணத்தில் பங்கேற்க சென்றுள்ளார்’ என கூறியிருந்தார். இதற்கு, பா.ஜ., மூத்த தலைவர் அமித் மால்வியா கூறுகையில், ”இந்திய ஒருமைப்பாட்டிற்கு சவால் விடுக்கும் நபர்களுடன், ராகுல் எப்போதும் நட்பு பாராட்டுவது ஏன்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
உத்தரகண்டின் சில பகுதிகளை, தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதிகளாக குறிப்பிட்டு, நேபாளம் ஒரு வரைபடத்தை வெளியிட்டது. அதற்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் நேபாளத்திற்கு சும்னிமா ஆதரவு தெரிவித்திருந்தார். சும்னிமா உதாஸ், மியான்மருக்கான முன்னாள் நேபாள துாதரான பீம் உதாசின் மகள்.
Advertisement