அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிக்கை: தஞ்சை மேயரின் நிகழ்ச்சி நிரலில், உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படம் பார்க்க செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கு மடிந்து கிடக்கு; விலைவாசி ஏறிக் கிடக்கு; அடிப்படை வசதி துாங்கி கிடக்கு. கேளிக்கையில் மூழ்கி தலைவர் ஊட்டியில் நடனமாட, அமைச்சர்கள், மேயர்கள், வாரிசின் நடிப்புக்கு விசில் ஊத, தமிழகத்தில் அநீதி கோர தாண்டவமாடுகிறது!
இதை எல்லாம் உதயநிதியின் தாத்தா காலத்துல இருந்தே நாம பார்த்துட்டு தானே வர்றோம்… இனிமே இப்படித்தான் இருக்கும்… பழகிக்குங்க!
மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, துாத்துக்குடியில் நிலக்கரி கையிருப்பு இருந்தும், ஐந்து நாட்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார். அதற்கான ஆதாரத்தை கேட்டிருந்தேன். அதுபற்றி அவர் பதில் கூறவில்லை. அண்ணாமலை இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக அவ்வப்போது பேசி வருகிறார். வேலை இல்லாதவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல தேவையில்லை.
பார்த்துட்டு இருந்த ஐ.பி.எஸ்., வேலையை உதறிட்டு, பொது சேவைக்கு வந்தவரை பார்த்து, வேலையில்லாதவர்னு பட்டுன்னு சொல்லிட்டீங்களே!
மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை: தமிழகத்தில் திருமணமான இளம் பெண்களில், ஐந்தில் இருவர் குடும்ப வன்முறையை எதிர்கொள்கின்றனர் என்பது, சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. குடும்ப வன்முறையில் ஈடுபடும் ஆண்கள், பெரும்பாலும் குடிப்பழக்கம் மிகுதியாக கொண்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழக அரசு, இப்பிரச்னையில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்.
வருஷா வருஷம், ‘டாஸ்மாக்’ மது விற்பனையை அதிகரிப்பது எப்படி என்று இலக்கு நிர்ணயித்து செயல்படுவரே தவிர, இதுக்கெல்லாம் இம்மி கூட அசைஞ்சு குடுக்க மாட்டாங்க, தோழரே!
பா.ஜ., மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: முன்னாள் பிரதமரை கொலை செய்த வழக்கில், தண்டனை பெற்ற குற்றவாளியை ஆரத்தழுவி வரவேற்றது முதல்வர் ஸ்டாலினின் பொறுப்பற்ற செயல். இந்திய மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அட… ரோஷம் வர வேண்டியவங்களே, ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக, ஐம்புலன்களையும் அடக்கிட்டு ‘தேமே’ன்னு இருக்காங்க… நீங்க ஏன் வீணா, ‘டென்ஷன்’ ஆகுறீங்க!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி: அ.தி.மு.க., – அ.ம.மு.க., இணைப்பு குறித்த யூகத்திற்கு பதில் சொல்ல முடியாது. வெற்றி, தோல்வி எல்லாம் அ.ம.மு.க.,வை பாதிக்காது.
அது சரி… தேர்தல்ல நிற்க ஆட்கள் இருந்தா தானே, வெற்றி, தோல்வியை பத்தி கவலைப்படணும்!