ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய போரானது, தற்போது 10-வது வாரத்தை எட்டியிருக்கிறது. போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை இருநாட்டு தரப்பினரும் மேற்கொண்டுவந்தாலும் கூட, சுமுகமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இப்படியிருக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், `அடால்ஃப் ஹிட்லர் யூத வம்சாவளியைச் சேர்ந்தவர், அவரின் உடலில் ஓடியது யூதர்களின் ரத்தம்’ எனக் கூறியிருந்தார். ரஷ்ய அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு இஸ்ரேல் கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும், செர்ஜி லாவ்ரோவின் பேச்சு தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை நேற்றிரவு வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “என்னிடம் வார்த்தைகள் எதுவும் இல்லை. மாஸ்கோவிலிருந்து இதுவரை யாரும் எந்தவித மறுப்போ அல்லது நியாயமோ கோரவில்லை. அங்கிருந்து(ரஷ்யா) நமக்குக் கிடைத்ததெல்லாம் வெறும் மௌனம் மட்டுமே. இது, இரண்டாம் உலகப்போர் கற்றுத்தந்த பாடத்தை ரஷ்யா மறந்துவிட்டது என்பதையே காட்டுகிறது. அப்படியில்லையென்றால், அதன் பாடங்களை அவர்கள் கற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம்” என ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.