இந்த சூழலில் தான், அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில், இடைக்கால நடவடிக்கைக்கக ரணில் விக்கிரமசிங்கேவை பிரதமராகப் பதவியேற்கும்படி அதிபர் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல, இலங்கையின் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, அதிபருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “இலங்கையின் இடைக்கால அரசாங்கத்தையும், பிரதமர் பதவியையும் ஏற்று நடத்தத் தயார்” என்று கூறியிருந்தார். அதேபோல, அவர் ஆட்சி பொறுப்பேற்க, குறுகிய காலத்துக்கு அதிபர் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு நிபந்தனைகளும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதனிடையே இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மாலை பதவி ஏற்றார். நாளை புதிய அமைச்சரவை பதவியேற்கும் எனக் கூறப்படுகிறது.
இலங்கையில் நிகழும் பல்வேறு போராட்டங்கள், குழப்பங்களுக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்கே பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டிருக்கிறார். புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் கலந்தாலோசனை செய்து, அரசியலமைப்பின் திருத்தச் சட்டம் குறித்துப் பேசி முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.