ஆனால், அவரது பிரதமர் பதவி நீண்டகாலம் நீடிக்கவில்லை; 2018-ம் ஆண்டு நிகழ்ந்த அரசியல் குழப்பத்தால், ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டார். அதேசமயம் அதிபர் மைத்திரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவைப் பிரதமர் பதவியில் அமர்த்தி அதிச்சியை ஏற்படுத்தினார். இதனால், அதிருப்தி அடைந்த ரணில் விக்ரமசிங்கே, `இந்த நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது’ எனக்கூறி போர்க்கொடி உயர்த்தினார். இறுதியாக, இந்த வழக்கை விசாரித்து மீயுயர் நீதிமன்றம் ரணில் விக்கிரமசிங்கேவைப் பதவி விலக்கியது அரசியலமைப்புக்குப் புறம்பானது எனக்கூறி அதிரடித் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.
2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. மகிந்த ராஜபக்சே பிரதமராகவும், அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே அதிபராகவும் பதவியேற்றுக்கொண்டனர். ஆனால் இந்தத் தேர்தலில், தனது சொந்தக் கட்சிக்குள்ளாகவே ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிர்ப்பலை வீசவே, சஜித் பிரேமதாச பிரதமராகப் போட்டியிட்டார்.
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியைச் சந்திக்கவே, கட்சி இரண்டாக உடைந்தது. சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தி எனும் புதிய கட்சியை அறிவித்தார். தனித்துவிடப்பட்ட ரணில் விக்ரமசிங்கே, 2020-ல் நடைபெற்ற இலங்கை பொதுத்தேர்தலில் போட்டியிட்டு ஒரு இடத்தைகூட கைப்பற்றமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு, படுதோல்வியை சந்தித்தார். அதேசமயம், பிரிந்து சென்று தனிக்கட்சி ஆரம்பித்த சஜித் பிரேமதாச 54 இடங்களைக் கைப்பற்றி இலங்கை எதிர்க்கட்சித் தலைவரானர். இருப்பினும், 2021-ம் ஆண்டு, கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் மூலமாக, நாடாளுமன்றத்தில் காலடி எடுத்துவைத்தார்.
ரணில் விக்கிரமசிங்கே தனது 43 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், ஒருமுறை கூட தனது பிரதமர் பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்திசெய்தது கிடையாது. இந்த நிலையில், இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண அரசியல் சூழ்நிலை காரணமாக, அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அழைப்பின்பேரில் மீண்டும் இலங்கை பிரதமராக பதவியேற்றிருக்கிறார் ரணில் விக்கிரசிங்கே!
இனி இலங்கையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.