சென்னை தி.நகரில் நேற்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் அப்போது பேசிய அவர், “நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் பல தலைவர்கள் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்துள்ளார்கள்.
ஆனால், அவர்கள் பல்வேறு காலகட்டத்தில் இலங்கை மக்களுக்காகப் போராடி இருக்கிறார்கள். பா.ஜ.க வேண்டாத கட்சியாகக் கொள்கையாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனக்கு காலச்சக்கரத்தை மாற்றியமைக்கும் ஒரு சக்தி கிடைத்தால், 2008-ம் ஆண்டு மோடியை பிரதமராக மாற்றிருப்பேன். ஏனென்றால், மோடி பிரதமராக இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் போன்ற இலங்கை சம்பவம் நிகழ்ந்திருக்காது.
இலங்கை பிரச்னைக்குத் தீர்வு கொடுப்பதற்கு நரேந்திர மோடியைத் தவிர வேறு யாரும் கிடையாது. யாழ்ப்பாணக் கலாசார மையத்தை பிரதமர் மோடிதான் கட்டிக் கொடுத்துள்ளார். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மோடி சரியான வகையில் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். அந்த காலகட்டத்தில் இந்தியா எடுத்த முடிவு மிகவும் தவறானது. தனி ஈழம் உருவாக்கப்பட்டால் உலகத்தில் மிகச் சிறிய நாடாக அது தான் இருக்கும். இதுவரை இலங்கைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இந்தியா நிதியுதவி செய்துள்ளது.
கச்சத்தீவு விவகாரத்தில் இந்திய மீனவர்கள் படகுகளை விடுவிக்கக் கூடாது எனப் பேசுபவர்கள் அங்கிருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்கள்தான். கச்சத்தீவு ஒப்பந்தம் கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது எனக் குறிப்பிட்டாலும், கச்சத்தீவைச் சுற்றி இருக்கக்கூடிய இடங்களில் மீன் பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு உரிமை இருந்தது. அது பிரிவு 6 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவசர நிலை காலகட்டத்தில் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக அந்த பிரிவு 6-ஐ ரத்து செய்தனர்.