செந்தில் தொண்டமான், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்:
“கோத்தபய ராஜபக்சே அதிபராக பதவியேற்றபோது இலங்கையின் அந்நிய செலவாணி கையிருப்பு 7.5 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், இப்போது 2.5 மில்லியனுக்கும் கீழாக குறைந்துவிட்டது. இதற்கு முழு பொறுப்பும் கோத்தபய ராஜபக்சேவின் தவறான நிர்வாகம் தான்! தேர்தலில் போட்டியிடாதவர்களை அமைச்சர்களாகவும், ராணுவ அதிகாரிகளை கவர்னர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், அமைச்சர் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், போன்ற அரசின் நிர்வாகம் சார்ந்த பதவிகளில் தன்னிச்சையாக பணியமர்த்தியதும்தான் முதன்மைக் காரணம். இப்படி நிர்வாகத் திறனற்ற, அனுபவமற்றவர்களை அரசின் முக்கியமானத் துறைகளில் உயர் அதிகாரிகளாக நியமித்து, அவர்களின் அனுபவமற்ற செயல்பாடுகளினால் இலங்கைக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது; இவற்றை பொதுமக்கள், ஏனைய கட்சிகள் சுட்டிக்காட்டியபோதும் அதை திருத்திக்கொள்ள கோத்தபய அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்ட மக்கள் ஜனாதிபதி, பிரதமரை பதவி விலகவேண்டும் எனக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். உண்மையில், இதற்கெல்லாம் பொறுப்பேற்றுக்கொண்டு தாமாகவே முன்வந்து இருவரும் பதவி விலகிருக்க வேண்டும். ஆனால், இப்போது பிரதமர் மிகிந்த ராஜபக்சே மட்டும்தான் பதவி விலகியிருக்கிறார். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும்! அப்போதுதான் மக்களின் கோபம் தணியும். மீண்டும் கோத்தபய ராஜபக்சே பதவியில் தொடர்ந்தால் இலங்கையின் நிலை இன்னமும் இப்படியேத்தான் இருக்கும். ஒருவேளை கோத்தபய பதவி விலகினால் அந்த இடத்திற்கு Parliament speaker இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார். அது இல்லாதபட்சத்தில் Chief Justice அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நாட்டை நிர்வகிக்கலாம்! அதன்பிறகு புதிதாக ஆட்சிக்கு வருபவர்கள் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும். எப்படிப் பார்த்தாலும் இலங்கை இயல்பு நிலைக்குத் திரும்ப சில ஆண்டுகளாவது ஆகும்!”