வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில், அரசுக்கெதிரான மக்களின் போராட்டமானது நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டே இருக்கிறது. மேலும் கலவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையில், கடந்த திங்கள் கிழமை அன்று மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் போராட்டம் கலவரமாக வெடித்தது. இக்கலவரத்தில், ராஜபக்சேவின் பூர்வீக வீடு, அவருக்கு சொந்தமான ஓட்டல்கள் என பல சொத்துக்கள் தீக்கிரையாகின.
பின்னர் பிரதமர் மாளிகையிலிருந்து வெளியேறிய ராஜபக்சே மற்றும் அவரின் குடும்பத்தினர் திருகோணமலை பகுதியில் தலைமறைவாகியிருப்பதாகவும், அங்கிருந்து வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகின. இந்த நிலையில், ராஜபக்சே தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கொழும்பு நீதிமன்றம், மகிந்த ராஜபக்சே உட்பட 14 பேர் வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.