’சின்னசேலம் அருகே லஞ்சம் வாங்கியதை சுட்டிக்காட்டிய நபர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல் அதிகாரி’ என்ற பின்னணி குரலுடன் வீடியோ காட்சி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரவு நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவில், டி-ஷர்ட் அணிந்திருக்கும் ஒரு நபர், இளைஞர் ஒருவரைக் கொடூரமாகத் தாக்குகிறார்.
அதற்கு, “எதற்காக என்னை அடிக்கிறீர்கள்?” என்று அந்த இளைஞர் கேட்க, மறுபடியும் அவரை கொடூரமாகத் தாக்கி கீழே உட்கார வைக்கிறார். அதன்பிறகும் அவரைத் தொடர்ந்து தாக்கியதால் தன் மகனை விட்டுவிடும்படி கெஞ்சுகிறார் அந்த இளைஞரின் தாய். அதற்கு ’ஓடுடி நாயே..’ என்கிறார் டி-ஷர்ட் அணிந்திருக்கும் நபர்.
கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திவரும் அந்த வீடியோ காட்சியின் பின்னணியை ஆய்வு செய்தோம். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சுதாகர், கடந்த 2020-ம் ஆண்டு வி.சி.க-வை சாதி பெயர் சொல்லி திட்டியதாக பா.ம.கவைச் சேர்ந்த இருவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்.