அண்மையில் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட வேண்டும் என்று மகாராஷ்டிராவில் தொடங்கிய பிரச்னை, ஹிஜாப் விவகாரம்போல, பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களில் தீவிரமடைந்துவருகிறது. அந்த வகையில், டெல்லியில் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட வேண்டும் என பா.ஜ.க தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பா.ஜ.க தலைவர் ஆதேஷ் குப்தா, “சவுதி அரேபியா, இந்தோனேசியா போன்ற இஸ்லாமிய நாடுகளில்கூட மசூதிகளில் ஒலிபெருக்கிகள் இல்லை. உத்தரப்பிரதேசத்திலும் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. இப்படியிருக்க டெல்லியில் மட்டும் என்ன பிரச்னை? பல மாநிலங்கள், மத வழிபாட்டுத்தலங்களிலிருந்து ஒலிபெருக்கிகளை அகற்றும் முடிவை எடுத்துள்ளன, பொதுமக்களும் அதை வரவேற்றுள்ளனர். ஒலி மாசு அளவும் டெல்லியில் உச்சத்தை எட்டியுள்ளது. எனவே, தேசிய தலைநகரில் அமைதியான சூழலை ஏற்படுத்த ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்கான பிரசாரத்தை டெல்லி முதல்வர் நடத்த வேண்டும்” என்று கூறினார்.
மேலும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மத வழிபாட்டுத் தலங்களிலிருந்து ஒலிபெருக்கிகளை அகற்றக் கோரி பா.ஜ.க-வின் டெல்லி பிரிவு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று கடிதம் எழுதியிருப்பதாகவும் ஆதேஷ் குப்தா தெரிவித்தார்.