கடந்த பிப்ரவரி மாதம், 24-ம் தேதி ரஷ்யா-உக்ரைன் இடையே தொடங்கிய போர் இன்று வரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ராணுவ வீரர்கள் மட்டுமின்றி, அப்பாவிப் பொதுமக்களையும் ரஷ்யப் படைகள் கொன்று குவித்து வருகிறது என உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. போரை நிறுத்துவதற்கான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
இந்த நிலையில், டாவோசில் உலக பொருளாதாரக் கூட்டமைப்பில் பொதுமக்கள் மத்தியில் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசினார். அப்போது அவர், “போரின் தொடக்கத்தில் கீவ் நகருக்கு வெளியே ரஷ்யப் படைகள் ஆக்கிரமிப்பு செய்திருந்த பகுதியில் நிறையபேர் கொல்லப்பட்டனர். இப்படியாக பலர் உயிரிழந்து கொண்டிருக்கும் சூழலில், ரஷ்யாவின் பிற அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துவதை எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியாதது.
ரஷ்யா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அதிபர் புதினுடன் மட்டுமே பேசத் தயாராக இருக்கிறேன். புதின் தவிர, ரஷ்யக் கூட்டமைப்பு சார்பில் வரும் யாருடனும் எந்தக் கூட்டத்திலும் பேச நான் தயாராக இல்லை. ரஷ்யக் கூட்டமைப்பின் தலைவர்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார். அதிபர் இல்லாமல் போரை நிறுத்தும் முடிவை எடுக்கமுடியாது” என்றார்.