Friday, June 17, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்``உங்கள் அரசியல் அஜென்டாவை தனியாக வைத்துக் கொள்ளுங்கள்..!" - திமுக மீது பாயும் வானதி சீனிவாசன்

“உங்கள் அரசியல் அஜென்டாவை தனியாக வைத்துக் கொள்ளுங்கள்..!" – திமுக மீது பாயும் வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி எம்.எல்-ஏவும், பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் பெட்ரோல்,டீசல் விலையைக் குறைத்தது. அப்போதே, மாநிலங்கள் தங்களுடைய வரி சதவிகிதத்தை மக்களுக்கு விலைக் குறைப்பாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன.

வானதி சீனிவாசன்

கடந்த ஓராண்டில், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை 78 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ரஷ்யா–உக்ரைன் போர் சூழல் காரணமாக விலை அதிகரித்துக் கொண்டே இருந்தது.

சாமான்ய மக்களுக்கு ஏதாவது வகையில் உதவி செய்ய வேண்டும் என்பதற்காக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விலைக் குறைப்பை அறிவித்துள்ளார். ஆனால், தமிழ்நாடு அரசு பெட்ரோல்-டீசல் விலைக் குறைப்புப் பற்றி வாய் திறப்பதில்லை. மாநில வரியை குறைக்க மாட்டோம் என மாநிலத்தின் நிதியமைச்சர் பிடிவாதமாக இருக்கிறார்.

பெட்ரோல் டீசல்

எப்படி ஏழை மக்களுக்காக பேசுங்கள் என பா.ஜ.க உறுப்பினரைப் பார்த்து சட்டசபையில் ஸ்டாலின் கூறினாரோ, அதே மக்களுக்காகத்தான் இப்போது நாங்களும் கேட்கிறோம். விலைக்குறைப்பால், நவம்பர் மாதம் முதல் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு இழந்து வருகிறது.

மாநில அரசு இதுவரை ரூ.3,000 கோடி வருவாயை இந்த வரி மூலம் பெற்றுள்ளது. தங்களது வரியை விட்டுக் கொடுக்காமல், மத்திய அரசை நோக்கி மாநிலத்தின் நிதியமைச்சர் கேள்வி கேட்டு கொண்டிருக்கிறார். உங்களது வேலையை சரியாக செய்யாமல், மத்திய அரசை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். எது மத்திய அரசின் வேலை, எது மாநில அரசின் வேலை என்து அரசியமைப்புச் சட்டத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

வரி

இந்திய மக்கள் ஒவ்வொருவரும் முன்னேற வேண்டும் என்பதுதான் கூட்டாட்சித் தத்துவம். உங்களின் தனிப்பட்ட விருப்ப வெறுப்புக்கு, அரசியல் பயன்பாட்டுக்காக ஒவ்வொரு முறையும் கூட்டாட்சித் தத்துவத்தின் வரையறையை மாற்றிக் கொள்ளக் கூடாது.

பல்வேறு உட்கட்டமைப்பு வசதித் திட்டங்களை தொடங்கி வைக்க, தமிழக நலன் சார்ந்த விஷயத்துக்காக பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். மத்திய, மாநில அரசாங்கங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம்.

மோடி

மோடியை எதிர்ப்பது, பா.ஜ.க-வை எதிர்ப்பது மாதிரியான உங்களின் அரசியல் அஜென்டாவை தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அதைவிட மாநிலத்தின் நலன் முக்கியம். உங்களின் ஈகோவுக்காக மக்கள் நலனை பலிகடா ஆக்காதீர்கள். தமிழக அரசு உடனடியாக பெட்ரோல்–டீசல் விலையைக் குறைக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குற்றச்சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. மாநிலத்தின் தலைநகரிலேயே மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தாமல், குறை சொல்வதில்தான் கவனம் செலுத்துகின்றனர். எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை தனிப்பட்டரீதியாக மிரட்டுகிறார்கள்.

கிரைம்

அதிகாரம் எங்களிடம் இருக்கிறது என்பதால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என நினைக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, தி.மு.க கவுன்சிலர்களும், அவர்கள் கணவர்களும் செய்யும் ரௌடித்தனத்தை புத்தகமாகவே வெளியிடலாம்.

சமூக நீதி, சட்டம் ஒழுங்கை வார்த்தையாக வைத்துக் கொள்ளாமல் செயலில் காட்ட வேண்டும். தி.மு.க அரசு ஆரம்பகட்டத்தில் மிகவும் நேர்மையாக செயல்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்கினர். கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு அமைச்சரின் இலாக்காவிலும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அமர்ந்து கொண்டு,

ஜூனியர் விகடன்

அரசாங்கம் செய்ய வேண்டிய கடமைக்கு எல்லாம் விலை நிர்ணயம் செய்யும் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர். இதை வெளிக் கொண்டு வந்ததற்காக விகடன் பத்திரிகை மீது வழக்கு போட்டு அவர்களை பயமுறுத்த பாக்கிறார்கள். விகடன் இதுபோல எத்தனையோ வழக்குகள் போட்டு மீண்டு வந்த பத்திரிகை. அவர்களுக்கு இது புதிது இல்லை.

ஆனால், ஊடகங்களை மிரட்டி அடிபணிய வைக்க முடியும் என்கிற எண்ணம், ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் தி.மு.க-வுக்கு வந்துள்ளது. இன்னும் 4 ஆண்டுக்கால தி.மு.க ஆட்சி எப்படி இருக்கப் போகிறது என்று நினைக்கவே பயமாக இருக்கிறது. ஓராண்டுக்குள் தி.மு.க ஆட்சியை மக்கள் வெறுக்க தொடங்கிவிட்டனர்.

முதல்வர் ஸ்டாலின்

‘வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல், வாக்களிக்காத மக்களும், இவர்களுக்கு வாக்களிக்கவில்லையே என வருந்தும் அளவுக்கு ஆட்சி செய்வோம்’ என முதல்வர் கூறினார். உண்மையில் தி.மு.க-வுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் வருந்தும் நிலைதான் நிலவுகிறது” என்றார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments