Thursday, June 30, 2022
Homeஉலக செய்திகள்உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு மத்திய அரசு ஏன் இன்னும் நிதி அறிவிக்கவில்லை?

உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு மத்திய அரசு ஏன் இன்னும் நிதி அறிவிக்கவில்லை?

இந்திய சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாகிஸ்தான் இந்திய எல்லையில் சிறு அத்துமீறலில் ஈடுபட்டாலே போர்ப் பிரகடனம் செய்கிற அளவுக்கு வீராவேசமாக முழங்குகிற பிரதமர் மோடி, சீன இராணுவம் 20 இந்திய இராணுவ வீரர்களைக் கோரமாகக் கொன்ற பின்னரும்கூட மிதவாதப்போக்கை கையாள்வது ஏன்? பாகிஸ்தானுக்கும், சீனாவுக்குமான அணுகுமுறையில் மலைக்கும், மடுவுக்குமாய் வேறுபாடு இருப்பதன் பின்னணி என்ன?

பாகிஸ்தான் படைகளுக்கெதிராக இந்திய இராணுவத்தை முடுக்கி விடும்போதெல்லாம் ‘துல்லியத் தாக்குதல் (Surgical Strike)’ எனும் சொற்பதத்தை நொடிக்கொரு முறை உச்சரித்த பிரதமர் மோடியின் நாவும், அதனை வெளியிட்ட அவரது சிந்தையும், தற்போது அதனை மொத்தமாய் மறந்துபோனதும், பெரும் உயிரிழப்புகளைச் சந்தித்த பின்னரும்கூட இவ்விவகாரத்தில் சீன அரசின் ஆதிக்கமே நிலவ வழிவகுப்பதுமான பின்வாங்கல் நகர்வுகள் எதன் வெளிப்பாடு?

1999ஆம் ஆண்டு எல்லைப்பகுதியான கார்கிலில் பாகிஸ்தான் படைகள் பெருமளவில் திரண்டதற்குப் பிறகு தற்போதுதான் இந்திய எல்லைப் பகுதியில் அண்டை நாட்டின் இராணுவத்தினர் ஆக்கிரமித்துப் பெரிய தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். 56 இஞ்ச் பரந்த மார்பு கொண்டவரெனப் பெயரெடுத்த பிரதமர் மோடிக்கு எல்லைப் பகுதியை அந்நியர்கள் ஊடுருவாவண்ணம் காக்கும் நெஞ்சுரம் இல்லையா? காங்கிரசு ஆட்சிக்காலத்தில் இதுபோல் ஊடுருவல் நடந்தால் நோஞ்சான்களின் ஆட்சி என்று பேசி தேசப்பக்தி பாடமெடுத்ததெல்லாம் எலெக்ஷன் ஷூம்லாவா?

ஏப்ரல் மாதத்தின் இறுதியிலேயே லடாக் எல்லையில் மெய் கட்டுப்பாட்டுக்கோட்டில் சீன நாட்டின் துருப்புகளும், வாகனங்களும் பெருமளவில் குவிக்கப்பட்டப்போதே விழித்துக்கொள்ளப் பிரதமர் மோடி தவறியதன் பின்னணியென்ன? லடாக்கின் எல்லையில் சீனத் துருப்புகள் அணிவகுத்ததையும், கடந்த சூன் 16ஆம் தேதி சீன அதிபர் ஷி ஜின்பிங் நாட்டின் பெயரைக் குறிப்பிடாமல், இராணுவத்தைத் தயாராக இருக்க அறிவுறுத்தியதையும் பிரதமர் மோடி எச்சரிக்கையுணர்வோடு எதிர்கொள்ளாதது ஏன்?

லடாக்கில் நடந்தது திட்டமிட்டத் தாக்குதல் என்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர், திட்டமிடப்படுவதைக் கணிக்காமல் விட்டது யார் பிழை? உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், பாதுகாப்புத்துறை அமைச்சகம் என்று மூன்று துறை இருந்தும் நிர்வாகத்தில் கோட்டைவிட்டதன் விளைவு இந்நாட்டுக்காகத் தீரத்துடன் பணியாற்றிய 20 இராணுவ வீரர்களின் உயிர்கள் அநியாயமாகப் பறிபோய்விட்டன. இதற்கு யார் பொறுப்பேற்பது?

மே 5 மற்றும் 6ஆம் தேதிகளில் இரு நாட்டு இராணுவத்திற்கும் இடையேயும் பேச்சுவார்த்தை நடந்தபோது செய்யப்பட்ட பொதுப் புரிந்துணர்வு என்ன? அப்பேச்சுவார்த்தைக்குப் பிறகும் சூன் 16, 17 ஆகிய நாட்களில் இரு படையினரும் சண்டையிட்டுக்கொண்டது ஏன்? எதன் விளைவாக? இதுவரை அதைப்பற்றி யாரும் விவாதிக்கவில்லையே ஏன்?

இந்திய இராணுவம் பலமான நிலையில் உள்ளது எனப் பிரதமர் மோடி கூறுவது உண்மையென்றால், சீன இராணுவத்திற்கு எவ்வித உயிரிழப்பும் ஏற்பட்டதாக இதுவரை அறிவிப்புவராத நிலையில் இந்தியா மட்டும் 20 இராணுவ வீரர்களை இழந்தது ஏன்? இறந்துபோன 20 இராணுவ வீரர்கள் ஆயுதமின்றி நிராயுதபாணியாகக் கொல்லப்படக் காரணமாக அமைந்தது எது?

1996 மற்றும் 2005ஆம் ஆண்டு ஒப்பந்தங்களின்படியே, இந்திய இராணுவ வீரர்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்லவில்லை என விளக்கமளிக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பயங்கர ஆயுதங்களோடு சீன இராணுவத்தினர் தாக்க வரும்போது ஆயுதமற்ற நிலையில் இருக்கும் இந்திய இராணுவ வீரர்கள் அவர்களை எதிர்கொண்டால் உயிரிழப்பு ஏற்படும் என்பதை அறியாதவரா? மரணித்துப் போன 20 குடும்பங்களின் உயிரிழப்புக்கும் ஒப்பந்தத்தையே காரணமாகக் காட்டப் போகிறாரா? இராணுவ வீரனின் உயிரைவிட ஒப்பந்தம் மேலானதா?

இந்திய இராணுவத்தின் மீது தாக்குதலைத் தொடுத்து 20 இந்திய இராணுவ வீரர்களின் உயிர்களைப் பறித்திருக்கும் சீன இராணுவத்திற்கும், சீனா அரசுக்கும் பாஜக அரசு எதிர்வினையாக எதனை ஆற்றப்போகிறது? அவ்வினை அவர்களுக்கு எவ்விதத்தில் பதிலடியாக அமையும்? வெறும் வாய்ச்சவடால் விட்டதே போதுமென்று நினைத்துவிட்டாரா பிரதமர் மோடி?

Also see:

இந்திய இராணுவ வீரர்கள் மீதான சீன இராணுவத்தின் இக்கோரத் தாக்குதல் வழமையான அத்துமீறலோ, சீண்டலோ அல்ல; மறைமுகமாகச் சீனா இந்தியாவுக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை எனச் சீன நாட்டின் இத்தாக்குதலை இந்திய இராணுவ உயரதிகாரிகளே அதிமுக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுப் பெருஞ்சம்பவமெனக் குறிப்பிட்டிருக்கும் நிலையில் இந்தியாவை ஆளும் பாஜக அரசு என்ன மாதிரி தற்காப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது?

சீனா இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களைவிட இந்தியா சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் எண்ணிக்கை அதிகமாகி வர்த்தகச் சமமின்மையை நெடுநாட்களாய் எதிர்கொள்கிறது இந்தியா. 2018ஆம் ஆண்டில் மட்டும் இந்திய-சீன வர்த்தகப் பற்றாக்குறை 57.86 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. இந்த வர்த்தகச் சமநிலையையே எட்ட இயலா நிலையில் வர்த்தகக் கொள்கையை வைத்துக் கொண்டிருக்கிறது பாஜக அரசு. உண்மை நிலை இவ்வாறிருக்க, ‘சீனப்பொருட்களைப் புறக்கணிப்போம்’ என இந்தியாவெங்கும் பாஜவினர் பரப்புரை‌ அரசியல் செய்வது எதை திசைத்திருப்ப?

இந்தியப் பொருட்சந்தையில் பயன்படுத்தப்படும் பொருட்களில் மூன்றில் ஒன்று சீன நாட்டினைச் சார்ந்தது எனும் அளவுக்குச் சீன அரசு மறைமுகப் பொருளாதாரப் படையெடுப்பை இந்தியா மீது நிகழ்த்தி, சீனாவை சார்ந்திருக்கும் நிலையில் நம்மை இறுத்தியிருக்கும் தற்காலத்தில் அவற்றிலிருந்து மீளவும், தற்சார்புப் பொருளாதாரக் கட்டமைப்பை நிறுவவும் எவ்வித வழிமுறைகளைக் கையாள இருக்கிறார் பிரதமர் மோடி? திட்டங்களை வகுத்துவிட்டாரா?

நாட்டுக்குள் கொண்டு வரப்படும் பேரழிவுத்திட்டங்களை மண்ணுரிமைப் போராளிகள் எதிர்த்து நிற்கிறபோது அதனைத் தேசத்துரோகம் எனவும், இந்திய இறையாண்மையைத் தகர்க்கும் கொடுஞ்செயல் எனவும் விளிக்கிற மத்திய அதிகாரத்தில் அங்கம் வகிக்கும் ஆட்சியாளர்கள், 20 இராணுவ வீரர்கள் கொலையுண்ட இப்படுபாதகச் செயலை எவ்வாறு பார்க்கிறார்கள்? அந்நியக் கைக்கூலிகள் எனப் பொய்யுரைத்து போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பொங்கியெழுந்ததில் இருந்த கோபத்தில் பாதியளவுகூட இவ்விவகாரத்தில் இல்லாது போனதேன்?

இந்நாட்டுத் தமிழ் மீனவர்களை எல்லைத் தாண்டியதாகக் கூறி சுட்டுப்படுகொலை செய்யும் சிங்களப் பேரினவாத இலங்கையை ‘நட்பு நாடு’ என இன்றளவிலும் போற்றிக் கொண்டாடி வருகிறது இந்தியா. அந்நாடு இந்திய – சீனா எல்லை விவகாரத்தில் இந்தியாவின் பக்கம் நிற்கும் எனப் பிரதமர் மோடி அறுதியிட்டுக் கூறுவாரா? சீனாவின் பக்கம் இலங்கை நிற்பது உறுதியானால் இலங்கையுடனான நட்பைக் கை கழுவுவாரா?

நாட்டின் எல்லையைக் காக்கும் பெரும் போரில் தங்கள் உயிரையே ஈகம் செய்திட்ட இந்நாட்டு இராணுவ வீரர்கள் மரணித்து இத்தனை நாட்களைக் கடந்தும் மத்திய அரசு அவர்கள் குடும்பத்திற்கு எவ்விதத் துயர்துடைப்பு நிதியும் அறிவிக்காதிருப்பது ஏன்? தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் மாண்டுபோன தனது மாநிலத்தின் மகனுக்கு மட்டுமல்லாது மற்ற மாநிலத்து இராணுவ வீரர்களுக்கும் சேர்த்து நிதியுதவி அறிவித்திருக்கும் நிலையில் முதன்மைச் செயலாற்ற வேண்டிய மத்திய அரசு இந்நாள்வரை மௌனம் சாதிப்பது என்ன மாதிரி அணுகுமுறை? இறந்துபோன இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அறிவிப்பது மட்டும்தான் மத்திய அரசின் வேலையா?’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments