மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், இந்தியாவின் பன்முகத்தன்மை ஒருபோதும் மோதலுக்கு காரணமாயிருந்ததில்லை என கூறியுள்ளார். குஜராத் மாநிலம் வாதோராவில் நேற்று நடைபெற்ற `சன்ஸ்கர் அபுதெய் ஷிவிர்’ எனும் நிகழ்வில் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.
அப்போது மேடையில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “உலகில் அனைத்து மதத்தினரும் நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழும் ஒரே நாடு இந்தியா. இந்தியாவின் பன்முகத்தன்மை ஒருபோதும் மோதலுக்குக் காரணமாயிருந்ததில்லை. இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தில் 72 பிரிவுகள் உள்ளன. கேரளாவில் உள்ள செயின்ட் தாமஸ் தேவாலயம் இந்தியாவிலேயே மிகப் பழமையான தேவாலயம்.
பார்சி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் தாய்நாட்டில் பல இன்னல்களுக்கு ஆளானபோது, முதலில் அவர்கள் இங்கு தான் தஞ்சமடைந்தனர்” எனக் கூறினார்.
மேலும் தொடர்ந்து பெண்ணுரிமை குறித்து பேசிய ராஜ்நாத் சிங், “இன்றைக்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை கொடுப்பது பற்றிப் பேசும்போது, வேத காலத்திலும், பெண்களுக்கென கண்ணியமான இடம் இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.