பகல்கோடுமந்து சமுதாயக் கூடத்தில் தோடர் பழங்குடி மக்களுடன் கலந்துரையாடி, அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், பகல்கோடுமந்து மற்றும் அருகில் இருக்கும் சில கிராமங்களுக்குச் செல்ல கூடிய சாலைகளை சீரமைத்து தர வேண்டும். கால்நடைகளின் மேய்ச்சல் நிலத்தை அதிகரிக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் முதல்வரிடம் நேரடியாகவே தெரிவித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்டு கிராம மக்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மலைகளோடு சேர்ந்து பழங்குடியின மக்களை இந்த அரசு பாதுகாக்கும். இந்தப் பகுதியில் பால் பதப்படுத்தும் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சமுதாயக் கூடம் கட்டித் தரப்படும். சாலை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னைத் தொடர்புக் கொள்ளலாம். அரசு அனைத்து வித உதவிகளையும் செய்து தர தயராக இருக்கிறது” என்றார்.
அதைத் தொடர்ந்து முதல்வருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தோடர் பழங்குடியின மக்கள் பாரம்பர்ய நடமாடினர். அவர்களுடன் இணைந்து முதல்வரும் நடனமாடினார். அவர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்தினார். தோடர் பழங்குடியின மக்கள் இசைக் கருவிகளை முதல்வரிடம் வாசித்துக் காட்டினர். மழையையும் பொருட்படுத்தாமல் தங்கள் கிராமத்துக்கு வருகைதந்த முதல்வரைக் கண்டு மக்கள் நெகிழ்ந்தனர்.