‘பேரறிவாளன் ஒரு நிரபராதி. அவரது வாக்குமூலத்தைத் தவறாக பதிவு செய்துவிட்டேன்’ என்று 2013-ல் தியாகராஜன் ஐ.பி.எஸ் அவர்கள் வெளிப்படையாக வந்து பேட்டி கொடுக்கும்போதும், உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலமாகப் பதிவு செய்யும்போதும் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. அதன் பிறகு, உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுத்த கே.டி.தாமஸின் பேட்டி, கட்டுரைகளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இதெல்லாம் சேர்ந்துதான் என்னை இங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. அதேபோல, நீதியரசர் கிருஷ்ணய்யரைப் பற்றியும் சொல்ல வேண்டும்.
நான் இன்று வெளியில் வந்ததற்கும் அவர்தான் காரணம். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் அவர் கடிதம் எழுதினார். ‘மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறேன்’ என்று எனக்காக நீதியரசர் கிருஷ்ணய்யர் மன்மோகன்சிங்கிடம் கேட்டுக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், நான் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வழக்கறிஞர்களை உச்ச நீதிமன்றத்தில் அமர்த்திக் கொடுத்திருந்தார். இந்த விடுதலை சாத்தியப்படுத்துவதற்கு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதாரத்தையும் கட்டணத்தையும் எதிர்பார்க்காமல் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வாதாடியிருக்கிறார்.
அதேபோல, தமிழக அரசு தங்களுக்குள்ள அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் அஃபிடவிட் ஃபைல் செய்தார்கள். மூத்த வழக்கறிஞரை வைத்து திறம்பட வாதாடி தீர்ப்பை பெற்றுத் தந்துள்ளனர். மரண தண்டனைக் காலங்களில் எங்களோடு துணையாக இருந்த மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் இக்மோர் சௌத்ரியையும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். அதேபோல, ஊடகங்கள் இல்லையெனில் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்காது. உண்மைகள் வெளியில் வந்திருக்கின்றன. சிறைத்துறை, காவல்துறையிலிருந்தும் எங்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள். 31 ஆண்டுக்கால சட்டப் போராட்டம்தான் என்னுடைய வாழ்க்கை. கொஞ்சம் காற்றை சுவாசிக்க வேண்டும். மூச்சுவிட வேண்டும். ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன். சட்டப் போராட்டத்துக்காகவே என் வாழ்க்கையை செலவு பண்ணியிருக்கிறேன். நீதி அமைப்பு முறையில் திறம்பட சட்டப் போராட்டம் நடத்தினால், ஏதோ ஒரு வகையில் வெற்றிபெறலாம். எதிர்காலம் குறித்த எல்லாக் கேள்விகளுக்கும் பின்னர் விடையளிக்கிறேன். மரண தண்டனை வேண்டாம் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான்’’ என்றார் புன்னகை மலர்ந்த முகத்தோடு!