“என் சாவுக்கு திமுக கவுன்சிலர்தான் காரணம்!" – கடிதம் எழுதிவைத்து தூக்கில் தொங்கிய ஊராட்சி செயலாளர்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக கடந்த 13 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார் அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர். இவருக்கு காந்திமதி என்ற மனைவியும், 2 வயதில் யாகேஷ் என்ற குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு அவர் தனது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். சடலம் தொங்கிய அறையிலிருந்து மூன்றுப் பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்று சிக்கியது. அதனை ஊராட்சி செயலாளர் ராஜசேகர் தனது கைப்பட எழுதியிருக்கிறார்.

ஊராட்சி செயலாளர் ராஜசேகர்

அந்த கடிதத்தில், “எனது சாவுக்கு தி.மு.க-வைச் சேர்ந்த 17-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் ஹரிதான் காரணம். என் தம்பிக்கு ரேஷன் கடையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினார். அவர் பேச்சை நம்பி, பலரிடம் கடன் வாங்கி இரண்டரை லட்சம் ரூபாயை கொடுத்தேன். வேலையும் வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தை திரும்பப் கேட்டாலும் மிரட்டுகிறார். மேலும், ஊராட்சி டெண்டர் பணிகளிலும் கமிஷன் கேட்டு மிரட்டல் விடுக்கிறார்.

அவர் சொல்வதை கேட்காவிட்டால், பி.டி.ஓ-விடம் சொல்லி ஊராட்சி செயலாளர் பதவியிலிருந்து என்னைத் தூக்கிவிட்டு, துணைத் தலைவரின் மகனை இந்த வேலையில் அமர்த்தப் போவதாகவும் மிரட்டி வந்தார். கவுன்சிலர் ஹரி தொடர்ந்து, எனக்குப் போன் செய்து மன உளைச்சலை ஏற்படுத்தினார். என் சாவுக்கு உறவினர்களோ, நண்பர்களோ, அரசு அலுவலர்களோ காரணமில்லை. ஒன்றியக் கவுன்சிலரின் சூழ்ச்சியே காரணம்’’ என ராஜசேகர் குறிப்பிட்டிருக்கிறார்.

உறவினர்கள் மறியல்

இது சம்பந்தமாக, ராஜசேகர் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், வேப்பங்குப்பம் போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். இன்று பிற்பகலில், பிரேத பரிசோதனை முடிந்து ராஜசேகரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, உடலை வாங்க மறுத்து வேப்பங்குப்பம் காவல் நிலையம் எதிரிலேயே மறியலில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. எஸ்.பி ராஜேஸ்கண்ணன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ராஜசேகரின் மனைவி, ‘‘என் கணவன் தற்கொலைக்குக் காரணமான தி.மு.க கவுன்சிலர் ஹரியை கைது செய்ய வேண்டும்’’ என்று கதறி அழுதார். காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, மறியலை கைவிட்டு உடலை பெற்றுகொண்டனர்.

தி.மு.க கவுன்சிலர் மீதான புகார் தொடர்பாக, அதே கட்சியைச் சேர்ந்த அணைக்கட்டு ஒன்றியக் குழுத்தலைவர் பாஸ்கரனிடம் விளக்கம் கேட்டோம். ‘‘எங்கள் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் ஹரி மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. கவுன்சிலர் பெயரைச் சொல்லி வேறு யாராவது, ஊராட்சி செயலாளரிடம் பணம் பெற்றிருக்கலாம். எதுவாக இருந்தாலும், காவல்துறையினர் தீர விசாரித்து நடவடிக்கை எடுக்கட்டும். தற்கொலை செய்து கொண்ட ஊராட்சி செயலாளர் மீது நிதி கையாடல் புகாரும் இருக்கிறது’’ என்றார்.

Source link

Leave a Comment

Your email address will not be published.