சீனாவின் இந்த எல்லைத் தகராறுகளுக்கு எல்லையே இல்லை எனலாம். எக்ஸ்பேன்ஷனிஸம் எனப்படும் எல்லைகளை விரிவாக்கும் ஆசையால் அண்டை நாடுகளுக்கு தொல்லை கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளது சீனா.
குட்டி அண்டை நாடான பூடானின் சில பகுதிகளை ஆக்கிரமித்து, மாடு மேய்த்தலையே தொழிலாகக் கொண்டிருக்கும் மக்களை அங்கிருந்து சீனா விரட்டியடித்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தின் சில பகுதிகளை தங்கள் வரைபடத்தில் சேர்த்த நேபாளத்தின் வடக்கு மாவட்டங்களில் சீனா பல பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. அதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்களை மக்கள் நடத்தினாலும் கோடிகளை கொட்டும் சீனாவை எதிர்க்க நேபாள அரசுக்கு துணிவில்லை.
எவரெஸ்ட் சிகரமே தங்களுடையது என சீனாவின் சி.ஜி.டி.என். தொலைக்காட்சி செய்தி வெளியிட்டபோது நேபாளம் அதிர்ந்தே போனது. எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தையும் சீனா அளவிட தொடங்கியுள்ளது.
Also see:
நிலப்பகுதியில் மட்டுமின்றி தென் சீன கடல் பகுதியிலும், இந்திய பெருங்கடல் பகுதிகளிலும் தன் ஆதிக்கத்தை அதிகரிக்க சீனா துடித்துக் கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சரக்குகள் கையாளப்படும் தென் சீனக் கடல் பகுதியில் உள்ள தீவுகளை கைப்பற்றுவதற்காக புரூனே, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் தைவானிடம் வாய்க்கால் தகராறில் சீனா ஈடுபட்டுள்ளது.
இது போதாதென கிழக்கு சீன கடல் பகுதியில் தென் கொரியா மற்றும் நட்பு நாடான வடகொரியாவுடனும் பிணக்குகளைக் கொண்டுள்ளது சீனா. மேலும் ஜப்பானின் செங்காகு தீவையும் சீனா உரிமை கோர, ஜப்பான் அத்தீவின் பெயரை நேற்று மாற்றி, பதிலடி தந்துள்ளது.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் சோங்கா, வனுவாத்து உள்ளிட்ட குட்டி நாடுகளை கடன் வலைக்குள் சிக்கவைத்து, அங்கு ஆதிக்கத்தை நிலைநாட்டி ஆஸ்திரேலியாவுக்கு மறைமுக தொல்லை தந்து வருகிறது சீனா. இவ்வாறாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் வயிற்றெரிச்சலுக்கு ஷி ஜின்பிங்கின் அரசு ஆளாகியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.