இளம் விதவை சந்தியாவாக ‘டங்கல்’ புகழ் சானியா மல்ஹோத்ரா! அறிமுகமாகும் காட்சியில் கணவனின் மரணத்தால் மனசிதைவுக்கு உள்ளாகி இருக்கிறாரோ என சந்தேகிக்கும்படியான நடிப்பு. அதிலும் உப்பு காரம் இல்லாத சாப்பாட்டிற்குத் தொட்டுக்கொள்ள தோழியைக் காரணமாகச் சொல்லி சிப்ஸ் கேட்கும் காட்சியிலும், பெப்ஸி வேண்டும் எனச் சொல்லுமிடத்திலும், வயிற்றுவலி என்று பொய் சொல்லி கடைக்குப் போய் பானிபூரி சாப்பிடுமிடத்திலும், “கணவனை மன்னித்து விட்டேன்… ஆனால் பசிக்குது” எனச் சொல்லி அழும் காட்சியிலும் தேர்ந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார். கணவனின் முன்னாள் காதலியைப் பற்றி அறிய நேரும்போது ஏற்படும் கோபம், ஆற்றாமை, வெறுமை, ஏக்கம், பரிதவிப்பு என வெவ்வேறு பரிமாணங்களைத் தொட்டிருக்கிறது அவரின் நடிப்பு.
சானியாவிற்கு அடுத்தபடியாக கனத்த நடிப்பால் கவனமீர்ப்பது சானியாவின் மாமனார் மாமியாராக வரும் அசுதோஷ் ராணா – ஷீபா சட்டா.
“உங்கள் மருமகளுக்குத் துரோகம் செய்ய எனக்கு லஞ்சம் கொடுக்கப்பார்க்கறீங்களா?” என்ற இன்ஷூரன்ஸ் நிறுவன ஊழியரின் கேள்வியில் நிலைகுலைந்து பின் வீடு வந்து மனைவியிடம் பேசும்காட்சியில் அபாரமான நடிப்பு.
கணவனை இழந்த இளம் மனைவி, மூப்பினால் அனைத்தையும் மறந்து எல்லாரையும் மருமகளின் பெயரைச்சொல்லி விளிக்கும் பாட்டி, சூழல் தெரியாமல் ஷேக்ஸ்பியரின் வசனத்தைச் சொல்லி தன் மேதாவித்தனத்தை காட்டும் உறவுக்கார மாமா, மகனுக்கு ரெஸ்டாரன்ட் வைக்க தேவைப்படும் பணத்திற்காக மறுமணத்தை முன்னெடுக்கும் கணவனின் சித்தப்பா, பதின்மத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் சிறுவன் மற்றும் சிறுமி என ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அவ்வளவு யதார்த்தம். அண்ணியை விரும்பும் கொழுந்தன், கணவனின் முன்னாள் காதலி, உனக்கு திருஷ்டி கழிக்க வேண்டும் எனும் அம்மா, என்ன ஆனாலும் பணம் நம்ம குடும்பத்தை விட்டுப்போகக்கூடாது எனச் சொல்லும் குடும்பத்தின் பெரியவர், இஸ்லாமிய பெண் விருந்தாளிக்கு பிரத்யேகமாக வேறு கப்பில் ஸ்பெஷல் டீ கொடுத்து அவளை ஹோட்டலில் சாப்பிட வைக்கும் பழைமைவாத குடும்பம் என இப்படத்தில் நாம் பார்க்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் நிச்சயமாக நம் வாழ்வில் நாம் ஒரு முறையேனும் கடந்து வந்திருப்போம்.