கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி முதல்முறையாக 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தார். துரதிஷ்டவிதமாக ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்றாலும், ரஜினி போல் அரசியலுக்கு வருவதாகச் சொல்லிக் கொண்டே இருக்காமல், இறங்கிவிட்டார் என்ற பெரிய இமேஜ் அவருக்குக் கிடைத்தது. இதனையடுத்து, 2021-ம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் களம் கண்ட கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் நூலிலையில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க ஆட்சிக்கு வருகிறது என்பதை பீட் செய்யும் அளவுக்குக் கோவை தெற்கு தொகுதியின் வாக்கு எண்ணிக்கை சமுக வலைதளத்தில் பேசு பொருளானது. ஏனென்றால் கமல் தனது அரசியல் என்ட்ரியை அங்கிருந்துதான் தொடங்கினார். முன்னதாக ஆளும் அ.தி.மு.க-வுக்கு எதிரான கருத்துகளைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டுத்தான், அரசியலுக்கு அஸ்திவாரம் போட்டார் கமல்.
பின்னர் கட்சி தொடங்கியபோதும்கூட ட்விட்டரை விட்டு கமல் அரசியல் நேரடி களத்துக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டினை அவர் கட்சியினரே கூறி வந்தனர். அதேபோல, மாநில அரசை விமர்சிக்கும் அளவில் பாதிகூட கமல் மத்திய அரசை விமர்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மீது வைக்கப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல், கமல் மத்திய அரசை மறைமுகமாக மட்டுமே சாடி வருகிறார். மத்திய அரசு விவகாரங்கள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்கள் கேள்வி கேட்டாலும், `அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்’ எனக் கூறி விட்டு நழுவி விடுவார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, சொத்து வரி உயர்வு என மத்திய, மாநில அரசுகளை ஒரே தராசில் வைத்து அவர் கட்சியினர் நடத்திய போராட்டத்தில்கூட கமல் பங்கேற்கவில்லை. ‘விலைவாசியைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசும், மாநில அரசும் தமிழக மக்களைத் தாங்கொணா துயரத்தில் தள்ளி இருக்கின்றன’ என்று கட்சியினரின் போராட்ட படத்தை மட்டும் கமல் ட்விட்டரில் பதிவிட்டார்
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகத் தான் நடிக்கும் விக்ரம் படத்தின் சூட்டிங் மற்றும் விளம்பரத்தில் கமல் பிஸியாக இருந்தார். இந்தப் படத்தை தி.மு.க இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம்தான் வெளியிடுகிறது. அண்மையில், விக்ரம் படத்தின் முதல் பாடல் 12-ம் தேதி வெளியானது. இதில் பம்மல் கே சம்பந்தம் படத்தின் ‘மாடசாமி கந்தசாமி’ பாடல் தொனியில், பாடலை எழுதி பாடிருந்தார் கமல்.
அதில், `ஒன்றியத்தின் தப்பாலே… ஒன்னியும் இல்ல இப்பாலே, சாவி இப்போ திருடன் கைல, தில்லாலங்கடி தில்லாலே’ என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டில், அரசு கோப்புகள், மேடைகள் என எல்லாவற்றிலும், ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு வந்தது. ஆனால், அதனை அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஏற்கவில்லை. கமலின் ம.நீ.ம-வும் ஏற்கவில்லை. மாறாக மத்திய அரசு என்றே குறிப்பிட்டு வந்தது. கமலும் தனது ட்விட்டர் பதிவில் `மத்திய அரசு’ என்றே குறிப்பிட்டு வந்தார்.
கமலின் விக்ரம் பட பாடல் இணையத்தில் வைரலாகி சினிமா களத்தைத் தாண்டி, அரசியல் களத்திலும் விவாதப் பொருளாகியிருக்கிறது. இந்த நிலையில், இந்தப் பாடல் விவகாரம் குறித்து பா.ஜ.க துணைத் தலைவர் கரு.நாகராஜனிடம் பேசினோம்.
“கமல்ஹாசன் சிறப்பான நடிகர். ஆனால், பகுத்தறிவாளர் என்று கருப்பு சட்டை போடுவார். கம்யூனிசம் பேசி, சிவப்பு அணிவார். காந்தியைப் பின்பற்றுவதாகக் கூறுவார். அரசியலில் அவருக்கென தனிக் கொள்கை கிடையாது. இப்போது, மத்திய அரசை ஒன்றியம் எனக் கூறி, தி.மு.க-வின் ‘பி’ டீமாக தன்னை காட்டிக் கொண்டிருக்கிறார் கமல். இதுபோன்று மத்திய அரசை விமர்சித்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்று விளம்பரத்தால் படத்தை ஓட்ட நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது” என்றார் காட்டமாக.
மக்கள் நீதி மய்யத்தின் ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸிடம் கேட்டபோது, “ஒன்றியம் என்ற சொல் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒவ்வாமை இல்லை. அது தவிர்க்கப்படவேண்டிய வார்த்தையும் இல்லை. மத்திய அரசு என்றாலும், ஒன்றிய அரசு என்றாலும் ஒன்றுதான். சிலர் ஒன்றியம் என்றச் சொல்லைப் பிரிவினையாகப் பார்க்கிறார்கள். ஆனால், அரசியல் சாசனம் அங்கீகரித்த ஒன்றியம் என்ற வார்த்தையைத்தான் தலைவர் பயன்படுத்தியிருக்கிறார். அரசின் செயல்பாடுகளைத் தனது படங்களில் தொடர்ந்து விமர்சனம் செய்திருக்கிறார். அதேபோலதால் தற்போதும், இதில் எந்த பின்னணியும் இல்லை” என்றார்.