பூஜ்ஜிய எப்.ஐ.ஆர் மூலம் ராஜஸ்தான் அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகன் ரோஹித் ஜோஷி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெய்ப்பூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் போலீஸில் புகாரளித்திருக்கிறார். ரோஹித் ஜோசி மீது கொடுக்கப்பட்ட அந்த புகாரில், “ராஜஸ்தான் அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகன் ரோஹித் ஜோஷி எனக்கு முகநூலில்தான் அறிமுகம். அதன் பின்பு பேசி பழகினோம். கடந்த ஜனவரி 8, 2021 அன்று ராஜஸ்தானில் உள்ள சவாய் மாதோபூருக்கு அவர் என்னை அழைத்தார்.
அங்கு கணவன்-மனைவி என எங்கள் பெயர்களைப் பதிவு செய்து, விடுதி ஒன்றில் என்னை தங்க வைத்தார். பின்னர், அவர் என்னைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து, மது அருந்திவிட்டு என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். மறுநாள் காலையில் என்னுடைய நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடப்போவதாக மிரட்டினார். அதன் பின்பு, நான் பலமுறை அவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன். எப்போதெல்லாம் என்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவாரோ… அப்போதெல்லாம் எனக்கு கட்டாயப்படுத்தி போதை மருந்து செலுத்தி, என்னை சித்ரவதை செய்வார்.
ஒரு முறை கருக்கலைப்பும் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுக் கலைத்தேன். இந்த மனச்சோர்வாலேயே நான் மது அருந்தவும் ஆரம்பித்துவிட்டேன். எனவே, அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த இளம்பெண் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக வடக்கு டெல்லி காவல்துறை, பாலியல் வன்கொடுமை, போதை மருந்துகளால் காயப்படுத்துதல், கருச்சிதைவு ஏற்படுத்துதல், பெண்ணைக் கடத்துதல், இயற்கைக்கு மாறான குற்றங்கள், மிரட்டல் மற்றும் மானபங்கம் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், அமைச்சர் மகன் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது.
மகேஷ் ஜோஷியின் மகன் மீது சுமத்தப்பட்ட கற்பழிப்பு குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ராஜஸ்தான் அமைச்சர் பிரமோத் ஜெயின் பயா, “அரசியலில் குற்றச்சாட்டுகளும், எதிர்க் குற்றச்சாட்டுகளும் சகஜம்தான்” என்றார்.
இந்த நிலையில், தன் மகன் மீதான பாலியல் புகார் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த அமைச்சர் மகேஷ் ஜோஷி, “இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்திருப்பதாக காவல்துறையினர் எனக்குத் தகவல் தெரிவித்தனர். காவல்துறை கடுமையாகவும், நேர்மையாகவும் இதை விசாரிக்க வேண்டும். நான் எப்போதும் உண்மையின் பக்கமும், நீதியின் பக்கமும்தான் நிற்பேன். எந்த ஆரசியல் தலையீடும் இல்லாமல், காவல்துறையினர் தங்கள் வேலையைச் செய்யட்டும்” எனக் கூறினார்.