Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்`ஒரு தலைமுறையின் கனவைச் சிதைக்கும் பரிந்துரை இது!' இன்ஜினீயரிங் கட்டண உயர்வு குறித்து கல்வியாளர்கள்

`ஒரு தலைமுறையின் கனவைச் சிதைக்கும் பரிந்துரை இது!' இன்ஜினீயரிங் கட்டண உயர்வு குறித்து கல்வியாளர்கள்

அனைவருக்குமான சமூக சமத்துவத்தை உறுதிசெய்ய வேண்டிய கல்வி, தனியார் கல்வி நிறுவனங்களின் ஆதிக்கம், `நீட்’ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள், பெருகிவரும் பயிற்சி மையங்கள் போன்றவற்றால் சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல அமைந்திருக்கிறது, அகில இந்தியத் தொழில்நுட்ப கவுன்சிலின் புதிய பரிந்துரை.

கல்லூரி மாணவர்கள்

ஏ.ஐ.சி.டி.இ எனப்படும் இந்த கவுன்சில், தொழில்நுட்ப படிப்புகளுக்கான பாடத்திட்டம், கல்விக் கட்டணம், மாணவர் சேர்க்கை, ஆசிரியர்களுக்கான கல்வித் தரம் மற்றும் ஊதியம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் அதிகாரம் படைத்தது. தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான கல்விக் கட்டணத்தைத் திருத்தியமைக்க, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தற்போது பரிந்துரை செய்துள்ள அறிக்கையில், 30 சதவிகிதம் வரை கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தப் பரிந்துரை அமல்படுத்தப்பட்டால், பொறியியல் (இளநிலை, முதுநிலை), பட்டயப் படிப்பு, கேட்டரிங் உள்ளிட்ட மேலாண்மை சார்ந்த படிப்புகளுக்கான கட்டணம் பல மடங்கு வரை அதிகரிக்கும். “இந்தப் புதிய பரிந்துரை, ஏழை வர்க்கத்தினரின் உயர்கல்வி கனவுகளைச் சிதைப்பதாகவும் அச்சமூட்டுவதாகவும் அமையவே வழிவகை செய்யும்” என்று எச்சரிக்கின்றனர் கல்வியாளர்கள்.

ட்விட்டர் சர்வே முடிவுகள்

ஏ.ஐ.சி.டி.இ-யின் இந்தப் புதிய கட்டண பரிந்துரை குறித்து, அவள் விகடன் ட்விட்டர் பக்கத்தில் மக்களிடம் கருத்து கேட்டிருந்தோம். இந்த முடிவு, `கல்விக் கொள்ளைக்கு வழிவகுக்கும்’ எனவும், `பெற்றோர் சுமை கூடும்’ எனவும் தலா 35 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர். `கல்வி எட்டாக்கனியாகும்’ என 22.6 சதவிகிதத்தினரும், 6.5 சதவிகிதத்தினர் `இது நியாயமான கட்டணம்தான்’ என்றும் கூறியுள்ளனர். மக்களின் கருத்து இப்படி இருக்க, கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

இதுகுறித்து தனது பார்வையை முன்வைக்கிறார் கல்வியாளர் (பொதுப்பள்ளிக்கான மாநில மேடை) பிரின்ஸ் கஜேந்திரபாபு. “ஏ.ஐ.சி.டி.இ-யின் அறிக்கையில், குறிப்பிட்ட சில படிப்புகளுக்குக் குறைந்தபட்ச கட்டணம் மற்றும் அதிகபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் வசதிக்குத் தகுந்தாற்போல அவர்கள் பெறும் கட்டணம் மாறுபடும் என்பதையே காட்டுகிறது. ஒரே மாதிரியான கற்றல் வாய்ப்பை எல்லா மாணவர்களுக்கும் கொடுக்காதது அரசின் தவறுதானே? கல்வியில் ஏற்கெனவே புரையோடிப் போயிருக்கும் இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகளை மேலும் வலுப்படுத்துவதாகவும், கல்வி, இனியும் வணிகச் சந்தையாகவே தொடரும் என்பதை அழுத்தமாக உறுதிசெய்வதுபோல இந்தப் புதிய அறிக்கை அமைந்திருக்கிறது.

உயர்கல்வி

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான கட்டணத்தை உயர்த்த இப்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில், செலவுகள் கூடியுள்ளதாகவும், இதனால், கட்டணத்தை அதிகரிக்கத் தேவை ஏற்பட்டுள்ளதாகவும் காரணத்தை முன்வைக்கின்றனர். சரி, இந்த இடைப்பட்ட காலத்தில் எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான, தரமான கல்வி கிடைத்திருக்கிறதா? இதை உறுதிசெய்யாமல், தனியாருக்கு ஆதாயம் கிடைப்பதுபோல நடந்துகொள்வது முறைதானா? கல்வி என்பது உற்பத்தித்துறை அல்ல. எனவே, கல்வி நிறுவனங்கள் தங்களின் செலவினங் களுக்கு ஏற்ப மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் பெறுவது நியாயமாகாது.

பள்ளி இறுதியாண்டை முடிக்கும் முன்னரே, கல்லூரிப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு குறித்த அச்சத்தை இன்றைய சூழல் மாணவர்களின் மனதில் விதைக்கிறது. அதையும் தாண்டினால், கல்விக் கட்டணம் கழுத்தை இறுக்கினால், மாணவர்களால் நிம்மதியாகப் படிப்பைத் தொடர முடியுமா? பிள்ளைகள் படித்து முடிக்கும்வரை சாமானிய பெற்றோர்களின் மனம் எவ்வளவு பதைபதைப்புடன் இருக்கும். அதிகரிக்கும் இதுபோன்ற அபாய சூழல்கள், பெருவாரியான மாணவர்கள் உயர்கல்வியை நல்ல முறையில் முடிப்பதை நிச்சயமாகக் கேள்விக்குறியாக்கும். அதேசமயம், உயர் வர்க்க மாணவர்களுக்கான போட்டியைக் குறைத்து, பணபலத்துடன் அவர்கள் விரும்பிய படிப்பை எளிதில் முடிக்கவே ஊக்கமாக அமையும்.

பொறியியல் கல்லூரி

மாணவர்களின்மீது சுமையைத் திணிக்கக் கூடாது என்பதால்தான், தனியாரிடம் நிதியுதவி பெறுவதையும், தனியார் பங்களிப்பில் கட்டப்பட்ட கட்டடத்துக்கு, நன்கொடை வழங்கியவர்களின் பெயரை வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள். அதையும் மீறி, தங்களின் சுய லாபத்தை முன்வைத்து கல்வியை வியாபாரமாகச் செய்ய நினைப்பவர்கள், கல்வி நிறுவனங்களை நடத்தத் தகுதியற்றவர்கள்தான்” என்று ஆதங்கத்துடன் கூறுகிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் பரிந்துரைப்படியே, மாநிலத்திலுள்ள கல்வி நிறுவனங்களுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஏ.ஐ.சி.டி.இ பரிந்துரைத்துள்ள புதிய கட்டணம் குறித்துத் தமிழக அரசு என்ன முடிவெடுக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. “இப்போதைக்குக் கல்விக் கட்டணம் உயராது” என்று தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருக்கிறார்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு

“கல்வி நிறுவனங்களுக்கான கட்டண அளவுகோலை அகில இந்திய அளவில் தீர்மானிப்பது சரியானதாக இருக்காது” என்கிற பிரின்ஸ் கஜேந்திரபாபு, புதிய கல்விக் கட்டண விஷயத்தில் தமிழக அரசு எடுக்க வேண்டிய முடிவு குறித்துப் பேசினார்.

“மக்களுக்கான அடிப்படைத் தேவைகளில் கல்வியும் சுகாதாரமும் முக்கியமானவை. இதில், கல்விக்கூடங்களைத் தனியார் நிர்வகித்தாலும், அவை அரசின் மேற்பார்வையில்தான் இயங்க வேண்டும். கூட்டாட்சித் தத்துவத்தின்படி, கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும். மாறாக, கல்விக் கட்டணம் உள்ளிட்ட அடிப்படை விஷயங்களில் ஏ.ஐ.சி.டி.இ தலையிடுவது நியாயமாக இருக்காது. அதேபோல, தங்களைத் தேர்வு செய்தது பொதுமக்கள்தானே தவிர, பெரும் முதலாளிகள் இல்லை என்பதை மத்திய, மாநில அரசுகள் எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே, கல்வி விஷயத்திலும் மக்களின் பக்கமே அரசு துணை நிற்பதுதான் நியாயமானதாக இருக்கும்” என்று முடித்தார்.

இன்ஜினீயரிங் மாணவர்கள்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான கல்விக் கட்டண விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு முழுமையாக இருக்கிறது. அதேசமயம், சரியான காரணத்தையும் விதிகளையும் வகுத்து, தனியார் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான உரிமையும் தமிழக அரசுக்கு இருக்கிறது. மாறாக, தமிழக அரசின் முடிவுக்கு எதிராகத் தனியார் கல்வி நிறுவனங்கள் நீதிமன்றம் சென்றால், துணிச்சலுடன் அதை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தி சமூக நீதியை உறுதிசெய்யவும் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்.

மூத்தக் கல்வியாளர் ஒருவர், கல்விக் கட்டணம் உயர்வால், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகளைப் பட்டியலிட்டார். “நீட் தேர்வு குறித்த சர்ச்சைகளே இன்னும் விலகாத சூழலில், கலை அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கொண்டுவரப்படலாம் என்று புதிய கல்விக் கொள்கையில் கூறப்படுகிறது. ஏற்கெனவே இருக்கும் குழப்பமான கல்விச் சூழலில், இதுவும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அச்சத்தை அதிகப்படுத்தும்.

கல்விக் கட்டணம்

பொறியியல் படிப்பால் ஏராளமான நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதாரம் உயர்ந்ததை மறுக்க முடியாது. அதேசமயம் பெருகிவரும் கல்லூரிகள் மற்றும் கேள்விக்குறியாகிவரும் மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கல்வித்தரத்தினால், பொறியியல் படிப்பு மீதான எதிர்மறை எண்ணங்கள் இப்போது அதிகரித்திருப்பதையும் மறுப்பதற்கில்லை. இந்தச் சூழலில் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளுக்கான கட்டணம் உயர்ந்தால், சாமானியர்களுக்கு அந்தப் படிப்புகள் மீதான ஆர்வம் குறையக் கூடும். ‘வசதியானவர்களுக்கு மட்டுமே இந்தப் படிப்புகள் சாத்தியம்’ என்ற எண்ணம் பெரும்பாலானோரின் மனதில் வேரூன்றும்.

கல்விக் கட்டணம் உயர்ந்தால் என்ன? வங்கிக் கடன் பெற்றுப் படிக்க பல்வேறு வழிகள் இருக்கின்றனவே என்று கூறினால், அது தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளைக்கு ஊக்கம் தருவதாகவே அமையும். ஏனெனில், வங்கிக் கடன் பெற்றுப் படித்த மாணவர், படித்து முடித்ததுமே உரிய வேலைக்குத் தேர்வாகவில்லை எனில், அந்த மாணவனின் நிலை என்னவாகும்? படித்து முடித்ததும் வாங்கிய வங்கிக் கடனை அடைப்பதற்காகவே வேலைக்குச் செல்லும் மாணவனின் முதுகலை படிப்புக்கான ஆசைகள் கேள்விக்குறியாகாதா?

மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கல்வி குறித்த கனவுகளும் ஆர்வமும் கூடக்கூட அவர்களின் தலைமுறை வளர்ச்சியுடன், ஒட்டுமொத்த சமூகம் வளர்ச்சியடையும். அதையெல்லாம் தகர்க்கும் வகையில் கல்விக் கொள்கைகளை வகுப்பது, சமூக முன்னேற்றத்துக்கும் தடையாகவே அமையும்” என்று அழுத்தமான குரலில் முடித்தார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments