அ.தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், கடந்த சில தினங்களாகவே அ.தி.மு.க-வில் `ஒற்றைத் தலைமை’ என்ற விவாதம் பெரிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
தற்போது அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவி வகித்துவருகிறார்கள். இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக-வின் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் நடைபெற்றது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தது அதிமுக-வில் சர்ச்சையாக வெடித்தது.
இந்த நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் மாறி மாறித் தங்களுடைய கட்சி தொண்டர்களிடம் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அண்மையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ கடந்த ஆறு ஆண்டுகளாகச் சிறப்பாகச் சென்றுகொண்டிருக்கும் இந்த இரட்டைத் தலைமையே தொடரும். அ.தி.மு.க தொண்டர்களிடமிருந்து என்னை ஓரங்கட்ட யாராலும் முடியாது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் என்னுடைய கருத்தை கழக நிர்வாகிகளிடம் தெரிவித்துவிட்டேன். எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமை தேவையா… இல்லையா என்பது குறித்து அவருடைய கருத்தை தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்க சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். தொண்டர்கள் ஆரவாரத்துத்துடன் ஓபிஎஸ்-ஸுக்கு வரவேற்பு கொடுத்தனர். மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர், செல்லூர் ராஜூ ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. `எடப்பாடி பழனிசாமியின் ஆளா..?’ என்று கேட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பெரம்பூர் அதிமுக கட்சி நிர்வாகி ஒருவர் குற்றம்சாட்டியிருக்கிறார். சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்மானக்குழுக் கூட்டம் நிறைவடைந்த நிலையில், ஓபிஎஸ் அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். இதற்கிடையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 60-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு தெரிவித்ததாகவும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நான் ஒற்றைத் தலைமை பற்றிப் பேசியதில் என்ன தவறு இருக்கிறது. சென்னையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தொண்டர்களின் மனநிலையை நான் வெளிப்படுத்தினேன். இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். ஒற்றைத் தலைமை குறித்த மக்களின் கருத்துகளைத் தொண்டர்கள் பிரதிபலித்தனர். ஒற்றையா , இரட்டையா என்பதைக் கட்சி முடிவு செய்யும்” என்றார்.
cialis europe