தொடர்ந்து, நுழைவுக் கட்டணம் கேட்கப்பட்டு இருந்ததால், செந்தில்குமாரும் டிஜிட்டல் பரிவர்த்தனையான ‘கூகுல் பே’ மூலம் நுழைவுக் கட்டணத்தை செலுத்தியுள்ளார். இப்படியே, டாக்குமென்ட் சார்ஜ், பதிவு நடைமுறை செலவினம், ஜி.எஸ்.டி என அடுத்தடுத்து லாவகமாக செந்தில்குமாரிடமிருந்து பணத்தைப் பறித்துள்ளனர்.
இவ்வாறு ரூ.1.26 லட்சத்தை செலுத்தியப் பின்னரும் முதல்தவணை இருப்புக்காக மேலும் 36,833 ரூபாயை டெபாசிட் செய்துவிட்டால், உங்கள் கணக்கில் ரூ.20 லட்சம் வந்து சேர்ந்துவிடும் என்று, செந்தில்குமாரிடம் அந்த நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதற்கு செந்தில்குமார், ‘‘தன்னிடம் பணம் இல்லை. எனக்கு கடன் வேண்டாம். நான் கட்டிய பணத்தைத் திரும்பவும் வங்கிக் கணக்கில் அனுப்புங்கள்’’ என்று கூறியபோது, மறுமுனையில் பேசிய நபர் ‘‘96 சதவிகிதம் உங்கள் கடனுக்கான செயல்பாடு முடிந்துவிட்டது. முதல் தவணை தொகையை கட்டியவுடன் உங்கள் கணக்கில் பணம் வந்துவிடும்’’ என மீண்டும் மீண்டும் அதே வார்த்தையைக் கூறியுள்ளனர்.
அதன்பின்னரே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செந்தில்குமார், வேலூர் சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட ஃபேஸ்புக் லிங்க் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ‘‘ஆன்லைனில் வங்கிக்கடன் தருவதாக வரும் விளம்பரங்களை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம்’’ என்று சைபர் க்ரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.