இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு விதித்த தடையைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவைக் கேள்விப்பட்டு ஆதீன பக்தர்களும் பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்பினரும் கொண்டாடிவருகிறார்கள்.
இதைப்போலத்தான் சில நாள்களுக்கு முன்பு மதுரை மருத்துவக் கல்லூரி புதுமுக மாணவர்கள் சம்ஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்றதாக எழுந்த புகாரில் எந்த விசாரணையும் நடத்தாமல் டீன் ரத்தினவேல் மீது ஏப்ரல் 1-ம் தேதி நடவடிக்கை எடுத்தது தமிழக அரசு.
“தேசிய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்த உறுதிமொழியைத்தான் வாசித்தார்கள். அப்படியே அது தவறு என்று கருதினாலும் அதில் டீனின் பங்களிப்பு எதுவும் இல்லை, மிகவும் சிறப்பான மருத்துவ அதிகாரி” என்று அரசு மருத்துவர் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், மருத்துவ மாணவர்கள் கூறினார்கள். இங்கு மட்டுமல்ல… ஏற்கெனவே தமிழகத்திலுள்ள பல மருத்துவக் கல்லூரிகளில் சம்ஸ்கிருத உறுதி மொழி ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்ட தகவலும் வெளியில் வந்தது.
அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சியினர், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்த்தனர்.
இதைத் தொடர்ந்து ஓரிரு நாள்கள் கழித்து தமிழக அரசு, டீன் ரத்தினவேலுக்கு அனைத்துத் தரப்பிலும் ஆதரவு இருப்பதும், அவர்மீது எந்தக் குற்றச்சாட்டையும் வைக்க முடியாத நிலையில், மீண்டும் அவரை மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக நியமித்து உத்தரவிட்டது.
கடந்த 10 நாள்களில் தமிழகத்தைப் பரபரப்பாக்கிய இந்த இரண்டு சம்பவங்களும் தமிழக அரசின் அவசரத்தைக் காட்டுவதாகவும், மக்கள் மத்தியில் கவனம் பெறாத, நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிட்டு அது சர்ச்சையானதும் பின்வாங்குவதாக விமர்சிக்கப்படுகிறது.