மண்டபத்தின் நுழைவாயிலில் முன் பகுதியில் துளசி, தாமரை மலர்களை கொண்டு அலங்கார பந்தல் அமைத்திருந்தனர். சரியாக 11.40 மணிக்கு இதில் கலந்து கொண்டார் சசிகலா. சிறுவன் ஒருவன் வரவேற்புரை நிகழ்த்தினான். அப்போது நடராசன் குறித்து அவன் பேசியபோதும், புரட்சித் தலைவிக்கு தாயாக இருந்தவர் எனக் குறிப்பிடும்போதும் சசிகலாவின் கண்கள் கலங்கின. பின்னர் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார் சசிகலா.
மணமக்களையும், அவர்களது குடும்பத்தையும் வாழ்த்திய பின்னர் பேசிய சசிகலா, “கழகம் ஒன்றுபட வேண்டும், வென்று காட்ட வேண்டும். அ.தி.மு.க., உண்மையான தொண்டர்களின் தியாகத்தால் உருவானது. எதிர்க்கட்சியினர் எத்தனை கணக்குகள் போட்டாலும், நான் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அழித்து விடமுடியாது. இந்த இயக்கம் எத்தனையோ சோதனையான காலகட்டங்களை எல்லாம் கடந்து வந்துள்ளது. எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அதே சோதனையான காலம்தான், ஜெயலிலதா மறைவுக்குப் பிறகும் தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது.