கொச்சி :கேரளாவில், திரிக்காகரா சட்டசபை இடைத்தேர்தலில், காங்., வேட்பாளருக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி.தாமஸ் பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திஉள்ளார்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, திரிக்காகரா தொகுதி காங்., – எம்.எல்.ஏ., தாமஸ் இறந்ததை அடுத்து, இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தாமஸ் மனைவி உமாவை வேட்பாளராக காங்., நிறுத்திஉள்ளது.
இடது ஜனநாயக முன்னணி சார்பில் டாக்டர் ஜோ ஜோசப் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கொச்சியில் கே.வி.தாமஸ் கூறியதாவது:திரிக்காகரா இடைத்தேர்தலில், இடது ஜனநாயக முன்னணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வேன்.அதற்காக நான் காங்கிரசை விட்டு வெளியேறியதாக கருத வேண்டாம். ஏற்கனவே காங்.,கைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் கருணாகரன், அந்தோணி ஆகியோர், இடது ஜனநாயக முன்னணிக்கு சில சமயம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
|
ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டத்தில் கே.வி.தாமஸ் சமீபத்தில் கலந்து கொண்டார்.இதையடுத்து, அவரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்க, ஒழுங்குமுறை குழு அளித்த பரிந்துரைக்கு காங்., தலைவர் சோனியா ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில், ”காங்., வேட்பாளருக்கு எதிராக கே.வி.தாமஸ் பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, காங்., தேசிய பொதுச் செயலர் வேணுகோபால் எச்சரித்துள்ளார்.
ஆதித்யநாத் பிரசாரம்
உத்தரகண்டில் சம்பாவத் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் 31ம் தேதி நடக்கிறது.இத்தேர்தலில் போட்டியிடும் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு ஆதரவாக உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் உட்பட, பா.ஜ., தலைவர்கள் 40 பேர் பிரசாரம் செய்ய உள்ளனர்.
Advertisement