Thursday, June 30, 2022
Homeஜோதிடம்காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில்: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகல கருடசேவை!

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில்: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகல கருடசேவை!

`வையகம் கண்ட வைகாசித் திருநாள்’ எனப் போற்றப்படும், காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜ சுவாமி திருக்கோயிலின் வைகாசி பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட, 108 திவ்யதேசங்களில் 31வது தலம் காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜ சுவாமி திருக்கோயில். ஸ்ரீரங்கம் திருப்பதி தலங்களுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெற்ற கோயில் இது. இத்தலத்து சுவாமிக்கு, ‘தேவப்பெருமாள், தேவாதிராஜன், பேரருளாளன்’ எனப் பல பெயர்கள் இருந்தாலும், உற்சவர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் பெயரிலேயே இந்தக் கோயில் பரவலாக அறியப்படுகிறது.

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கருடவாகனம்

வையகம் கண்ட வைகாசித் திருநாள்

வைணவத் தலங்களில் சிறப்பு பெற்றதாகத் திகழும் இக்கோயிலில், வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நடக்கும். ஸ்ரீபிரம்மாவே, இந்தத் திருவிழாவை தேவராஜ சுவாமிக்கு நடத்துவதாக ஐதிகம். கொரானா காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தத் திருவிழா நடக்கவில்லை. தற்போது தடைகள் விலகிய பின்பு, பக்தர்களின் பங்கேற்புடன் இவ்விழா கோலாகலமாக வெள்ளிக்கிழமை (மே.13) தொடங்கியது.

அதுவும், தேவராஜ சுவாமியின் அவதாரத் திருநாளில் (வளர்பிறை, அஸ்தம் நட்சத்திரம்) இந்த ஆண்டில் விழா தொடங்கியிருப்பது இன்னும் சிறப்பைக் கூட்டுகிறது. பக்தர்களிடத்தில் மகிழ்ச்சியை அதிகரித்திருக்கிறது.

விழாவின் முதல் நாளன்று, திருக்கோயில் சம்பிரதாயப்படி கருவறையில் இருந்து ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன், தேசிகர் சந்நிதிக்கு எழுந்தருளினார். அங்கு அவருக்கு விசேஷ தீபாராதனை, பூஜைகள்  செய்யப்பட்டன. பின்னர், ராஜம் பட்டாச்சார்யார் கொடிமரத்தில் கருடக் கொடியை ஏற்றிட, விழா தொடங்கியது.

காஞ்சி ‘குடை அழகு’

கொடி ஏற்றத்துக்குப்  பின்னர், ‘வெங்கடாத்ரி கொண்டை’ அணிந்து, தங்கச்சப்பரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ‘கங்கை கொண்டான்’ மண்டபத்திற்கு எழுந்தருளினார். மாலையில் சிம்ம வாகனத்தில் புறப்பாடு ஆனார். அப்போது அவருக்கு ‘குடை போடுதல்’ வைபவம் நடைபெற்றது.

“நடை அழகு.. வடை அழகு.. குடை அழகு..” என்று சொல்லப்படுவது உண்டு. “ஸ்ரீரங்கம் நம்பெருமாளின் ‘நடை அழகு..’ திருப்பதி கோயிலின் ‘வடை அழகு..’ காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜர் பவனி வரும் ‘குடை அழகு..’ என்பதே இதன் கருத்து.

வரதராஜப்பெருமாள்

கோயிலை விட்டு எப்போது புறப்பாடு ஆனாலும், வரதர் இந்த குடையின் கீழேயே பவனி வருவார். வைகாசி பிரம்மோற்சவத்தின் விழாவின் முதல் நாளன்றும், கருட சேவையின் போதும் 2 புதுக்  குடைகள் சமர்ப்பிக்கப்படும். 16 கால் மண்டபம் அருகே, 24 இன்ச் அளவுள்ள, கனமான இந்தக் குடைகளை கீழே இருந்து தூக்கிக் கொடுக்க, அதனை சுமார் 6 பட்டாச்சாரியார்கள் தாங்கிப் பிடிப்பர். இதனை ‘குடை போடுதல்’ வைபவம் என்கிறார்கள். விரிந்த இந்தக் குடைகளின் கீழே பவனி வரும் வரதரின் அழகோ அழகு.

காஞ்சியின் ‘திருமலை’

இங்கு ஸ்ரீ தேவராஜ சுவாமி வீற்றிருக்கும் சந்நிதியை, ‘திருமலை’ என்று சொல்கிறார்கள். ஆம்! இந்தக் கோயில் ஊரின் சமதள பரப்பில் அமைந்து இருந்தாலும், மூலவர் இருக்கும் கருவறை, சிறிய குன்று மேலேயே உள்ளது. எனவே, 24 படிக்கட்டுகளின் மீதேறிச் சென்றுதான் சுவாமியை தரிசிக்க முடியும். படி ஏறும்போது அங்கே ஒரு துளை இருக்கிறது. அதன் வழியாகப் பார்த்தால், அங்கு பாறை இருப்பது கண்களுக்குப் புலப்படும். விழாக்காலங்களில் திருமலையில் இருந்தே புறப்பாடாகிறார் ஸ்ரீ வரதராஜ பெருமாள்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ‘கருட சேவை’ ஞாயிற்றுக்கிழமை (மே 15) இன்று நடக்கிறது. இன்று சுவாமி ‘தங்க கிரீடம்’ மற்றும் பிரிட்டிஷ் காலத்து அதிகாரியான ராபர்ட் கிளைவ் கொடுத்த ‘பச்சைக்கல்’ பதித்த, ‘மகர கண்டி’ ஆபரணத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா மே 19 ம் தேதி வியாழக்கிழமை அன்று நடக்கவிருக்கிறது.

வரதராஜப்பெருமாள்

அத்தி வரதர்

இந்த தலத்தின் இன்னொரு விசேஷம் ‘அத்தி வரதர்’. அத்தி மரத்தில் செய்யப்பட்ட ஸ்ரீ வரதராஜ பெருமாளின் விக்கிரகம் இக்கோயிலிலுள்ள அனந்த சரஸ் புஷ்கரணியில் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இவரை தரிசிக்க முடியும். அத்திவரதர் சிறப்பால் உலகெங்கும் அறியப் பெற்ற தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments