கட்டுமானங்களில் கான்கிரீட் பூச்சு பல ஆண்டுகள் நீடித்து உழைக்க தரமான சிமென்ட், மணல், ஜல்லி, நீரை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.
ஜல்லிகளின் தரமும், அளவும்
ஜல்லி வகைகளில் பொதுவாக 4.75 மில்லி மீட்டருக்கும் மேல் அளவு கொண்டவற்றை ஜல்லி என்றும், அதற்கு குறைவான அளவுள்ள நுண் ஜல்லி என்றும் இந்தியாவின் தர நிர்ணய கழகம் குறிப்பிட்டுள்ளது. கான்கிரீட் கட்டுமானங்களில் ஜல்லி பெரும் இடத்தை பிடித்துக்கொள்ளும். ஜல்லிகளின் வலிமை, வடிவம், அளவு கான்கிரீட் அமைப்புகளின் இயல்பாகவே சில பாதிப்புகளை ஏற்படுத்தும். ஜல்லியை சரியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.ஜல்லி வடிவம், அளவு கான்கிரீட் தளங்களை எளிதாக அமைக்க சரியான தன்மையை ஏற்படுத்துகின்றன. ஜல்லியின் அளவு சிறிதாக இருக்கும் போது மொத்தமாக அதன் மேற்பரப்பு அதிகமாகும். அதனால் , கான்கிரீட் கலவைக்கு அதிக நீர் தேவைப்படும். ஜல்லியின் அளவு பெரிதாக இருந்தால் மேற்பரப்பு குறைந்து, நீர் பயன்பாடும் குறையும்.
ஜல்லிகளை கழுவ வேண்டும்
தட்டையாகவும், நீளமாகவும் உள்ள ஜல்லியை விட உருண்டையாகவும், கூம்பு வடிவிலும் இருக்கும் ஜல்லிகள் குறைந்த அளவு நீர் பயன்பாட்டில், கான்கிரீட்டுக்கு ஏற்ற தன்மையை தரும். பொதுவாக கான்கிரீட்டில் நீரின் அளவு குறையும் போது அதன் வலிமை அதிகரிப்பதாக கூறுவர். அதனால், சரியான கோணங்கள், உருண்டையாக உள்ள ஜல்லிகளை பயன்படுத்துவதே நல்லது.கான்கிரீட் அமைப்பிற்கு ஏற்ப சரியான விகிதத்தில் ஜல்லி சேர்க்கப்படுவதோடு அளவிலும் கவனம் வேண்டும். ஜல்லிகளில் செடி, புல், களிமண், மண், சேறு, துாசிகள் ஆகியவை ஒட்டியிருந்தாலும் நீர் கொண்டு கழுவுவது அவசியம். கான்கிரீட் போடும் நேரம் ஜல்லியை கழுவினால் அதன் ஈரப்பதம் அதிகரித்து கட்டட உறுதி குறையும். அதனால், கான்கிரீட் போடுவதற்கு சில நாட்களுக்கு முன்பே அதை கழுவி வைத்துவிட வேண்டும்.
மணலின் பங்கு முக்கியம்
தொழில்நுட்ப ரீதியாக மணலை தான் நுண் ஜல்லி என்கிறார்கள். தரமான கான்கிரீட், சுவரின் மேற்பூச்சு கலவை ஆகியவற்றுக்கு சிமென்ட், பிற மூலப்பொருட்களின் தரத்துடன் மணலின் பங்கும் முக்கியமான ஒன்று. கான்கிரீட், பூச்சுக்கலவையில் உள்ள நுண் ஜல்லியான மணலின் அளவு 4.75 மில்லி மீட்டர் அளவிற்கு கீழ் இருக்க வேண்டும் என்று இந்திய தர நிர்ணயக் கழகம் கூறியுள்ளது.
Advertisement