காவல்துறையின் அசிங்கமான பக்கங்களைக் கண்டு அருவெறுப்படைந்து நீதியின் பக்கம் நிற்கும் விசாரணை அதிகாரி பெருமாள்சாமியாக பிரகாஷ்ராஜ். பாத்திரத்தை உள்வாங்கிய திறத்தையும் இத்தனை ஆண்டுக்கால நடிப்பின் முதிர்ச்சியையும் ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமாகப் பதிவுசெய்கிறார். அதிலும் இருளர்கள் தங்கள்மீது போடப்படும் பொய்வழக்குகளை அவர்களே விவரிக்கும் காட்சியும் அதில் பிரகாஷ்ராஜ் வெளிப்படுத்தும் உணர்வுகளும் துயரக்கவிதைகள். காவல்துறையின் கோர முகத்தை நம் கண்முன் கொண்டுவந்துவிடுகிறார் காவல்துறை உதவி ஆய்வாளராக வரும் தமிழ்.
சிறையிலிருந்து வெளிவந்த கைதிகளை சாதிப்பெயர் கேட்டு காவல்துறை கையாளும் முதல் காட்சியிலேயே நம்மை அதிரவைத்துவிடுகிறார் இயக்குநர் த.செ.ஞானவேல். இருளர்களின் எலிவேட்டை, பாம்பு பிடித்தல், பேச்சுமொழி, சாவுச்சடங்கு என ஒவ்வொன்றையும் நுட்பத்துடன் பதிவு செய்ததில் தெரிகிறது ஞானவேலின் மெனக்கெடல். ஓர் உண்மைச்சம்பவத்தை நம்பகத்தன்மையுடனும் அதேநேரம் நேர்த்தியான திரைமொழியுடனும் காட்சிகளாக மாற்றிய விதத்தில் வெற்றிபெற்றிருக்கிறார் ஞானவேல்.
“கெட்டவங்க உங்க சாதி, என் சாதியிலும் இருக்காங்க”, “ஒருநாள் கூலியா ஆயிரம் ரூபாய் கூட வாங்காத பொண்ணுதான் லட்சக்கணக்குல பேரத்தொகையை மறுத்திருக்காங்க”, “அந்த போலீஸ்காரங்க பாம்பு கடிச்சு வந்தாலும் காசு வாங்காம வைத்தியம் பார்ப்பேன் சார்”, “நீதிக்கு ஆதரவான வார்த்தைகளைவிட அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மௌனம் ஆபத்தானது”, “எல்லா போலீஸும் மோசம்னு நினைக்கிற வக்கீலும் எல்லா வக்கீலும் மோசம்னு நினைக்கிற போலீஸும் சேர்ந்து செய்யப்போற விசாரணை” என்று படத்தின் உயிர்ச்சாரத்தில் ஊறிப்போன வசனங்கள் குறிப்பிடப்பட வேண்டியவை. எல்லாவற்றுக்கும் மேல் ஒரு இருளர் சிறுவனின் குரலாக ஒலிக்கும் வசனம், பார்க்கும் அனைவரையும் அசைத்துப் பார்த்துவிடும்.
நீதிமன்றக் காட்சிகளை நம்பத்தன்மையாக்கியதில் K.கதிரின் கலை அமைப்புக்கு பெரும் பங்கு இருக்கிறது. இருளர் பகுதிகள், காவல்நிலையம், நீதிமன்றம் என இருப்பிடங்களை எதார்த்தமாய் உருவாக்கியிருக்கிறார் கலை இயக்குநர் கதிர். காவல் நிலையத்தில் நிகழும் காட்சிகளில் நம்மை ஒருவித பதைபதைப்பு மனநிலையில் வைத்திருக்கிறது எஸ்.ஆர்.கதிரின் கேமரா. ஷான்ரோல்டனின் இசை பெரிதாய் பலம் சேர்க்கவில்லை என்றாலும் பெரும் பலவீனம் என்றும் சொல்லமுடியாது.
இரண்டாம் பாதியில் வரும் பாடல்களைக் குறைத்து, படத்தின் நீளத்தையும் கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் கச்சிதமாகியிருக்கும்.