காஷ்மீரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, அரசு ஊழியரான ராகுல் பட் எனும் காஷ்மீர் பண்டிட் ஒருவர் அரசு அலுவலகத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு தாங்கள் தான் கரணம் என ‘காஷ்மீர் டைகர்ஸ்’ என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த நிலையில், `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் தான் இத்தகைய வன்முறையைத் தூண்டியதாக மெகபூபா முஃப்தி கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடத்தில் பேசிய மெகபூபா முஃப்தி, “காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை நாங்கள் உருவாக்கினோம். 2016-ல் உச்சக்கட்ட கலவரத்தின் போது கூட எந்த கொலையும் நடக்கவில்லை. ஆனால் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் தற்போது இத்தகைய வன்முறையைத் தூண்டியுள்ளது” எனக் கூறினார்.
மேலும், ஞானவாபி மசூதி விவகாரம் குறித்துப் பேசிய மெகபூபா முஃப்தி, “உண்மையான பிரச்னைகளை திசைதிருப்ப அவர்கள், இந்து-முஸ்லிம் பிரச்னையை உருவாக்கி தற்போது மசூதிக்குப் பின்னால் இருக்கிறார்கள்” எனக் கூறினார்.