படத்தின் ஆகப்பெரும் பலம் ஹான்ஸ் ஸிம்மரின் பின்னணி இசை. யூடியூப் மூலம் தனக்கு அறிமுகமான கத்ரீ கோவனிடம் ஒரு காட்சிக்கான இசையை இப்படி விவரிக்கிறார் ஸிம்மர். “இது மணலைப் போன்று ஒலிக்க வேண்டும். மண் எப்படி ஒலிக்கும் என்று என்றாவது யோசித்துண்டா. காற்றுடன் மணல் சேரும் போது அதுவொரு புதிய ஓசையை உருவாக்குகிறது. ஆனால், அது கடற்கரைக்கு ஒன்றாகவும், பாலைவனங்களுக்கு ஒன்றாகவும் மாறுபட வேண்டும். ஏனெனில் காற்றிலிருக்கும் ஈரப்பதம், ஒரு புதிய சத்தத்தை அதனுள் சேர்க்கிறது. இரண்டும் வேறுபடுகிறது.” அந்த அளவு DUNE படத்திற்கு இசையமைக்கும் செயல்முறையில் மூழ்கிபோய் இருந்திருக்கிறார் ஸிம்மர்! முன்பு சொன்னதுபோல படத்தின் பெரும்பகுதி மணலாலான பாலை நிலத்திலேயே நிகழ்கிறது. அதில் கொட்டிக்கிடக்கும் ஸ்பைஸாக இருப்பது ஹான்ஸ் ஸிம்மரின் இசை.
நோலனின் வணிக வியாபாரமும், பிரமாண்டமும், அது தரும் வீச்சும் அறியாதவரல்ல ஸிம்மர். அதற்கும் கடந்த தசாப்தத்தில் ஸிம்மரை எல்லோரும் நினைவுகூர்வது நோலன் படங்களுக்கான இசையில்தான். ஆனால், DUNE-க்கு தயாராவதற்காக ‘டெனெட்’டை தியாகம் செய்திருந்தார் ஸிம்மர். தான் படித்த DUNE, தான் கற்பனை செய்த காட்சிகளுக்கான இசையை தயாரிக்க வேண்டும் என்கிற அந்த 64 வயது மனிதரின் அவா ஒவ்வொரு காட்சியிலும் மயிர்க்கூச்செரியச் செய்கிறது.
படத்தின் ஒரு பகுதியாக உட்டா பாலைவனத்துக்குப் பயணம் செய்தார் ஸிம்மர். பாலைவனத்தின் ஒலிகளை கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். ‘Ripples in the sand’ல் வரும் பெண் குரல், ஒருவிதமான பயயுணர்வை ஏற்படுத்தாமல் அகலுவதில்லை. DUNE-க்கான பின்னணி இசை குறித்து இணையத்தில் தேடினால், DUNE OST, DUNE SKETCHBOOK-குடன், The art and Soul of Dune என்கிற ஒரு ஆல்பத்தையும் வெளியிட்டிருக்கிறார் ஸிம்மர். இது புத்தகத்துக்காக அவர் கம்போஸ் செய்த இசையாம். அடுத்தடுத்த பாகங்களில் இவை பயன்படுத்தப்படும் என நம்புவோமாக!