நம் நாட்டில் அரசியலில் பெண்களின் வருகை என்பது ஆண்களை விட குறைவாகவே உள்ளது. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், பெண்களுக்கு அரசியலில் ஈடுபாடு மிகக் குறைவாகவே உள்ளது என்ற பொதுக்கருத்து முக்கியமாக முன்வைக்கப்படுகிறது. இதையும் தாண்டி பல பெண்களுக்கு அரசியலில் ஆர்வம் இருந்தாலும் கூட, பல சமயங்களில் குடும்பத்தினராலும், சமூகத்தினராலும், பெண்களின் அரசியல் பங்கெடுப்பானது தடுக்கப்படுகிறது.
“பெண் குழந்தைகளை சமூகம் மற்றும் அரசியலில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும் ” என்ற நோக்கத்தில் ‘பாலிகா பஞ்சாயத்து’ (Balika Panchayat) எனும் பெண்கள் பஞ்சாயத்து அமைப்பு உருவானது. இந்த அமைப்பு இந்தியாவில் முதன்முறையாக, குஜராத்தில் உள்ள கச்சு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு முற்றிலும் பெண்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக 11 வயதிலிருந்து 21 வயத்துக்குட்பட்ட பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது என்பது இந்த அமைப்பின் தனித்துவமான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பின் நோக்கமே, பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே சமூகம், அரசியல் சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதாகும். அத்துடன் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமை போன்ற சமூக கொடுமைகளை அகற்றவும் இந்த அமைப்பு போராடுகிறது.
இது குறித்து பேசிய பாலிகா பஞ்சாயத்தின் உறுப்பினர் கர்பா பார்தி, `பாலிகா பஞ்சாயத்து என்பது 10 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட பெண்களின் பஞ்சாயத்து அமைப்பாகும். இதன் முக்கிய நோக்கமே, சிறுவயதிலிருந்தே அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வரும் பெண்களை ஊக்கப்படுத்துவதாகும். இதுபோன்ற பஞ்சாயத்தின் அமைப்புகளில் முடிவெடுக்கும் செயல்களில், பங்காற்ற வேண்டும் என்பது தான். இதுகுறித்து மகளிர் தினத்தன்று, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம், இந்த முன்னெடுப்பு சரியாக செயல்படும் பட்சத்தில், இதனை நாடு முழுவதும் கொண்டுசென்று செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், இந்த பாலிகா பஞ்சாயத்தானது கடந்த ஓராண்டு காலமாக எங்கள் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.
குஜராத் அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மூலமாக நடத்தப்படும், பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் (பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ) என்ற அரசு பிரசாரமானது, குனாரியா, மஸ்கா, மொடகுவா மற்றும் வத்சர் போன்ற மாவட்டங்களில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.