“துன்பம் என்பது மனித வாழ்வியலின் தவிர்க்க முடியாத நிகழ்வு, அதைத் தவிர்ப்பதற்காகக் குறுக்கு வழிகளைப் பின்பற்ற நினைக்கும் போது தான் ஆசை உருவாகிறது. அந்த ஆசை தான் இன்னொரு துன்பத்திற்குக் காரணமாகிறது” என்கிற புத்தரின் நிலைநிறுத்தப்பட்ட தத்துவத்தை மனிதர்கள் புரிந்து கொள்ள மறுப்பதால் தான் அடுத்தடுத்த மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன.
எதார்த்த வாழ்வில் குறுக்கு வழியை மேற்கொள்ளாமல் இயல்பான முயற்சிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அதனால் வெற்றியோ தோல்வியோ எது நிகழ்ந்தாலும் அதை ஏற்கிற மனநிலையே நம்மை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
அண்ணன், தங்கை பாசம், அம்மாவின் தாய்மைத் துன்பம், அப்பாவின் வறுமைப்பணிகள், நட்புத் தூய்மை இவற்றை மெல்லிய பட்டு நூல்களாக்கிப் பிய்ந்து போன காலுறைகள், பரிசாகக் கிடைத்த எழுதுகோல், பழுதடைந்த மிதிவண்டி, கடைசியாகக் கிடைக்கும் பரிசுக் கோப்பை இவற்றை மட்டுமே நெய்தல் கருவிகளாக்கி ஒரு சிறந்த படமாக உருவாக்கியிருப்பார் ஈரானிய இயக்குநர் மஜித் மஜித்.
அந்தத் திரைப்படம் தற்போது அக்கா குருவி என்ற திரைப்படமாகத் தமிழில் வருகிறது என்பது மகிழ்வைத் தரக் கூடியது.
மதுரை முத்து மூவிஸ், கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தைச் சாமி இயக்கியுள்ளார். இளையராஜா மூன்று பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார்.
சில்ட்ரன் ஆப் ஹெவன் திரைப்படத்தின் இயக்குநர் மஜித் மஜிதி இந்தத் தமிழ்த் திரைப்படத்தைப் பாராட்டிச் சொல்லியுள்ள வார்த்தைகள், “நாம் இந்தத் திரைப்படத்தை இந்தியாவிற்கு வந்து பார்க்க விரும்புகிறேன், இத்திரைப்படத்தின் இசை என்னை வசப்படுத்தியுள்ளது”
ஆம். நம் குழந்தைகளின் மனிதநேய உறவுகளுக்குத் துணைபோகும் திரைப்படமாக இது இருக்கலாம். மே 6 திரைப்பட வெளியீட்டிற்காகக் காத்திருப்போம்