குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது என்பது சாதாரண விஷயமில்லை. ஜாதகப் பெயர், குடும்பப் பெயர், பிடித்த பெயர் எனக் குடும்பத்தினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் எனப் பலரும் சல்லடை போட்டு சலித்து பெயரைத் தேர்வு செய்வது வழக்கம். வாழ்க்கை முழுவதும் அந்தப் பெயர்தான் அந்தக் குழந்தையின் அடையாளம் என்பதால் அனைவருக்கும் பிடித்தபடி, குறிப்பாக வளர்ந்த பிறகு அந்தக் குழந்தை, ‘ஏன் இந்தப் பெயரை வைத்தீர்கள்…’ எனக் குறை செல்லாதபடி இருக்கும் வகையில் தேர்வு செய்ய வேண்டும் என்றே நினைப்பார்கள் பலரும். என்ன பெயரைத் தேர்வுசெய்வது என்பது பலருக்கும் பெரிய குழப்பமாகவே இருக்கும். இந்தப் பிரச்னையைத் தீர்த்து, குழந்தைகளுக்கான சரியான பெயரைத் தேர்வுசெய்து கொடுத்து கோடிகளில் சம்பாதித்து வருகிறார், அமெரிக்காவைச் சேர்ந்த 33 வயதுப் பெண் டெய்லர் ஏ. ஹம்ப்ரி.
நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற இவர் தொழிலதிபர், எழுத்தாளர், கதைசொல்லி என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். குழந்தைகளுக்கான பெயர்களைத் தேர்வு செய்வதில் அதிக ஆர்வம் இருந்ததால், அதை Whats In a Baby Name என்ற பெயரில் பணம் ஈட்டித் தரும் தொழிலாக 2015-ல் மாற்றினார். பெற்றோர் விரும்பும் வகையில் பரம்பரை பெயர், குடும்பப் பெயரையும் தேர்வுசெய்து தருகிறார். 2020-ல் சுமார் 100 வாடிக்கையாளர்களைக் கொண்டு 1.14 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். தனித்துவனமான பெயர் பரிந்துரைக்காக இவருக்கு 7.6 லட்சம்வரை தரத் தயாராக இருக்கிறார்கள் பெற்றோர்கள்.