கூடாரங்களை அகற்றச் சொன்ன இந்திய வீரர்கள்

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோங், தவுலத் பெக் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 வாரங்களுக்கும் மேலாக இந்திய சீன ராணுவத்தினரிடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. மே மாதம் முதல் வாரத்தில் இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்ததால் எல்லையில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் இருநாடுகளும் எல்லையில் தங்களது படைகளை குவித்து வந்தன.

இதனை அடுத்து, ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர் பேச்சுவார்த்தைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடுத்து, படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன.

இதையடுத்து கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து இருநாடுகளும் படைகளை விலக்கிக் கொள்ளத் தொடங்கின.

இந்த சூழலில் நேற்று முன்தினம் பாயிண்ட் 14 எனும் இடத்தில் இரவு திடீரென இரண்டு நாட்டு வீரர்களிடையே மோதல் வெடித்தது. இந்த பகுதியில் சீன படைகள் கூடாரம் அடித்து தங்கியுள்ளனர். இந்த கூடாரங்களை அகற்றக் கூறி இந்திய படையினர் கூறியுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் மோதல் வெடித்துள்ளது.

இதில், துப்பாக்கிகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும், கற்கள், இரும்பு ராடுகள் போன்றவற்றை பயன்படுத்தியே வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தத கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான படை மீது சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்திய படையும் கற்களை கொண்டு எதிர்தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி, மற்றொரு வீரர் குண்டன் குமார் ஓஜா(Kundan Kumar Ohja) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதில் படுகாயமடைந்த 17 பேர் உயரமான பகுதியில் பூஜ்ஜியம் டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் இருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ராணுவ தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம், நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் காக்க உறுதியாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இந்த தாக்குதலில் சீனா தரப்பில் 43 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய எல்லைக்குள் அத்துமீறிய சீனா ஒருதலைபட்சமாக நடந்ததாகவும், இதனால், இருதரப்பும் நேருக்கு நேர் மோதும் சூழல் உண்டானதாகவும், வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீ வஸ்தவா தெரிவித்துள்ளார்.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் எல்லைக்குள்ளேயே இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் இருந்ததாகவும், சீனாவிடம் இருந்தும் இதையே எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதே சமயம், இந்திய ராணுவத்தினரே இரண்டு முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், அதுவே மோதலுக்கு வழிவகுத்ததாகவும் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாக ஷாவோ லிஜியான் ( Zhao Lijian) குற்றம்சாட்டியுள்ளார்.

இதனிடையே எல்லை பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடியிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை நடத்தினார்.

Also See:

இந்தியாவில் ₹ 10 விலையில் கொரோனா உயிர் காக்கும் மருந்து

இந்தியா – சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

Leave a Comment

Your email address will not be published.