கேரள மாநிலம் கோழிக்கோடு தொண்டையாடு அருகே மக்கள் நடமாட்டம் இல்லாத புதர்மண்டிய பகுதியை சிலர் சுத்தப்படுத்தியுள்ளனர். அப்போது ஒரு தென்னை மரத்தின் பக்கத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் கிடந்துள்ளன. அதை கண்ட தொழிலாளர்கள் ஏரியா கவுன்சிலருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். அந்த கவுன்சிலர் போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீஸார் அங்குசென்று தோட்டாக்களை சேகரித்தனர். அதில், 5 பாக்ஸ்களிலும், ஆங்காங்கே சிதறியும் தோட்டாக்கள் கிடந்தன. ஒரு பாக்ஸில் 50 தோட்டாக்கள் வீதம் 5 பாக்ஸ்களில் 250 தோட்டாக்களும், அந்த பகுதியில் சிதறிக்கிடந்த 16 தோட்டாக்கள் என மொத்தம் 266 தோட்டாக்களை போலீஸார் கைப்பற்றினர். தீவிரவாத பயிற்சியில் ஈடுபடும் நபர்கள் அந்த தோட்டாக்களை புதரில் மறைவாக விட்டுச்சென்றிருக்கலாம் என அப்பகுதியினர் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து கியூ பிரிவு போலீஸார் உள்ளிட்டவர்கள் விசாரணை நடத்தினர். புனே, இங்கிலாந்து உள்ளிட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் 0.22 அளவுடைய பிஸ்டல்களில் பயன்படுத்தும் தோட்டாக்கள் அவை என கண்டறியப்பட்டுள்ளன. லைசென்ஸ் பெறப்பட்ட துப்பாக்கிகள், ரைபிள் கிளப்களில் பயன்படுத்தும் துப்பாக்கிகளில் இந்த தோட்டாக்கள் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச்சுடும் பயிற்சியின்போது பயன்படுத்தும் பயரிங் டார்கெட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.