சென்னை பட்டிணம்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (25). இவர் குதிரை ஒட்டும் வேலை செய்து வந்தார். இவரும் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ் என்கிற கொள்ளு சுரேஷ் (28) என்பவரும் ஆட்டோவில் கடந்த 18.4.2022-ம் தேதி கெல்லீஸ் சிக்னல் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸார் இருவரையும் பிடித்து விசாரித்தனர். பின்னர் இருவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில் விக்னேஷ், திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து சட்டபேரவையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கவனஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசினார். அப்போது விக்னேஷ், மரணத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனக் கூறினார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வருவதாகவும், பிரேத பரிசோதனை அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விக்னேஷின் அண்ணன் வினோத், நேற்று (6.5.2022) ரகசிய வாக்குமூலம் அளித்தார். இந்தச் சூழலில் விக்னேஷ் மரண வழக்கை கையில் எடுத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், விக்னேஷின் அண்ணன் வினோத், ஆட்டோ டிரைவர் பாபு ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதன்பிறகு தலைமைச் செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், ஏட்டு முனாஃப், காவலர்கள் பவுன்ராஜ், கணபதி, குமார், ஆனந்தி, ஊர்காவல் படை வீரர் தீபக், டிரைவர் கார்த்திக் ஆகியோரிடம் ஏழு மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தினர். அப்போது காவலர் ஆனந்தி, விக்னேஷ் மரணம் தொடர்பாக சில முக்கிய தகவல்களைக் கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார், “விசாரணைக் கைதி விக்னேஷ், உயிரிழந்த சம்பவத்தில் பிரேத பரிசோதனை அடிப்படையில் இந்த வழக்கை கொலை வழக்கமாக மாற்றியுள்ளோம். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய காவலர்கள் பவுன்ராஜ், முனாஃப் ஆகியோரை கைது செய்துள்ளோம். அவர்கள் இருவரிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளோம். அவர்கள் இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதுதவிர இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ புகழும் பெருமாள் உள்ளிட்ட காவலர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர்களுக்கும் இந்த வழக்கில் தொடர்பிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே எஸ்.ஐ புகழும் பெருமாள் உட்பட மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
விக்னேஷ் மரணம் தொடர்பாக சுரேஷிடமும் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறோம். ஏற்கெனவே இந்த வழக்கில் ஆட்டோ டிரைவர் பாபு, சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதுதவிர விக்னேஷ், சுரேஷ் ஆகியோரை போலீஸார் பிடித்த இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராப் பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம். அதில் சில பதிவுகளில் விக்னேஷ், போலீஸார் பிடியிலிருந்து தப்பி ஓடும் காட்சிகள் உள்ளன. மேலும் கத்தியைக் காட்டி அவர் மிரட்டும்பேது, போலீஸார் அவரை மடக்கிப் பிடிக்கும் காட்சிகளும் இருக்கின்றன. அதனடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. இந்த வழக்கில் விக்னேஷின் அண்ணன் வினோத், தனக்கு போலீஸார் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததாக குற்றம்சாட்டி வருகிறார். அதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ், சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் என இருவரிடமும் விசாரணை நடத்தப்படும். இந்த வழக்கில் எந்தவித பாரபட்சமுமின்றி நேர்மையான முறையில் சட்டப்படி விசாரணை நடத்தப்படும்” என்றனர்.