கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சசிகலா, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, அவர் மகன் அசோக், ஆறுக்குட்டி உதவியாளர் நாராயணசாமி, மறு விசாரணைக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி,
இன்ஜினீயர் அசோக், மர வியாபாரியும், அதிமுக வர்த்தக அணி மாநில அமைப்பாளருமான சஜ்ஜீவன், அவருடைய சகோதரர்கள் சிபி, சுனில் என்று விசாரணை பல்வேறு கோணங்களில் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் இதுவரை மூன்று நாள்கள், 27 மணி நேரம் போலீஸ் விசாரணை நடத்தினர். நேற்று இந்த வழக்கின் 6-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் பிஜின் குட்டி சகோதரர் மோசஸ் உள்ளிட்ட இருவரிடம் போலீஸ் விசாரணை நடத்தினர்.
மோசஸ் மற்றும் சஜ்ஜீவன் சகோதரர் சிபிக்கு ஏற்கெனவே பழக்கம் இருந்துள்ளது. நண்பர்களான இவர்கள், கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவம் நடந்த இரவுகூட, செல்போனில் பேசியதாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில் ஏற்கெனவே சிபியிடமும் போலீஸ் விசாரணை நடத்தினர். இந்நிலையில், சஜ்ஜீவனின் மற்றொரு சகோதரரான சுனிலிடம் போலீஸ் இன்று விசாரணை நடத்திவருகின்றனர். சம்பவத்தின்போது, கேரளாவைச் சேர்ந்த குற்றவாளிகள் தப்பிச் செல்லும்போது கூடலூர் காவல் சோதனைச்சாவடியில் சிக்கினர்.
பிறகு காவல்துறையிடம் பேசி அவர்களை விடுவித்தது சுனில்தான். அதனடிப்படையில் சுனில் வழக்கின் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். குற்றவாளிகளுக்கும், சஜ்ஜீவன் சகோதரர்களுக்கும் எப்படிப் பழக்கமானது, இதில் சஜ்ஜீவனின் பங்கு என்ன என்பது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.